மக்ரோன் அரசின் குடியேற்றச் சட்டம் எதிர்பாராத விதமாக தோற்கடிப்பு!
மன்றில் முதல் நாளன்றே எதிர்க் கட்சிகள் திரண்டு அதிரடியாக நிராகரித்தன
உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னாவால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய குடியேற்றச் சட்டப் பிரேரணை பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் கீழ்ச் சபையில் எதிர்பாராதவிதமாக முதல் நாளே தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.
அடிப்படைக் கொள்கையில் முரண்பாடு கொண்ட – எதிரும் புதிருமான எதிர்க் கட்சிகளாகிய – தீவிர வலதுசாரிகளும் தீவிர இடதுசாரிகளும் பிரேரணையைத் தோற்கடிப்பதில் ஓரணியில் நின்றமையே அரசுக்குத் தோல்வியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது மக்ரோனின் அரசு சந்தித்த மிகப் பலமான அரசியல் பின்னடைவாகக் கருதப்படுகிறது. வெளிநாட்டவர் குடியேற்றத்தையும் நாட்டில் அதனுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்களையும் கட்டுப்படுத்துவதற்கு அரசின் சட்டமூலம் போதுமானதாக இல்லை என்ற காரணத்துக்காகவே வலதுசாரிகள் அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
குடியேற்றச் சட்டமூலம் கீழ்ச் சபையில் நேற்றுத் திங்கட்கிழமை காலை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் மீது விவாதம் ஆரம்பமாகிய குறுகிய நேரத்தில் அந்தச் சட்டமூலத்தை நிராகரிக்கக் கோரும் பிரேரணை ஒன்று சபையில் முன்வைக்கப்பட்டது. அதன் மீது நடத்தப்பட்ட வாக்களிப்பிலேயே அது நிராகரிக்கப்பட்டிருக்கிறது. வலது சாரிப் பழமைவாதிகள் மற்றும் மரின் லூ பென் அம்மையாரது தீவிர வலதுசாரிக் கட்சி எம்பிக்கள், தீவிர இடதுசாரிகள் என முத்தரப்பினரும் வெவ்வேறு நோக்கங்களுடன் கூட்டாகத் திரண்டு வாக்களித்ததன் மூலமே சட்டப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிராத மக்ரோனின் அரசு, அதன் புதிய குடியேற்றச் சட்டப் பிரேரணையை வலதுசாரிகளது ஆதரவோடு நிறைவேற்றிவிடலாம் எனக் கணக்குப் போட்டு எடுத்த முயற்சிகள் இதன் மூலம் தவிடுபொடியாகியிருக்கின்றன.
முக்கிய பிரேரணை ஒன்று தோற்கடிக்கப்பட்டிருப்பதால் பெரும்பான்மை பலமற்ற அரசாங்கமும் உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பிவந்த நிலையில் – உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா நேற்றிரவு எலிஸே மாளிகையில் அரசுத் தலைவர் மக்ரோனைச் சந்தித்துத் தனது பதவி விலகல் கடிதத்தைக் கையளித்தார் என்று கூறப்படுகிறது. அதனை மக்ரோன் ஏற்றுக்கொள்ளவில்லை.
குடியேற்றச் சட்ட மூலத்தை நிராகரிக்கக் கோரும் வாக்கெடுப்பில் 270 எம்பிக்கள் வாக்களித்துள்ளனர். அதில் 268 வாக்குகள் நிராகரிப்புக்கு ஆதரவாக அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆக இரண்டு வாக்குகளே எதிராகச் செலுத்தப்பட்டுள்ளன.
சர்ச்சைக்குரிய சட்ட மூலம் நிராகரிக்கப்பட்டிருப்பதால் அதனை வாபஸ் பெறுவதற்கு முன்பாக அதனை நிறைவேற்றுவதற்கு அரசுக்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன.
அதனை மீண்டும் மேற்சபையாகிய செனட் சபையின் இரண்டாவது வாசிப்புக்குச் சமர்ப்பிப்பது. வலதுசாரிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட செனட் சபை அதன் மூலம் சட்ட மூலத்தை மேலும் வலுவுள்ளதாக மாற்றி அங்கீகரிக்கும்.
இரண்டாவது வழி முறை நாடாளுமன்றத்தின் இரண்டு சபைகளினதும் கூட்டுக் குழு ஒன்றிடம் சட்டமூலத்தைச் சமர்ப்பித்து இணக்கம் எட்டுவது.