உலக தமிழர் பேரவையினரின் திட்டத்தை வரவேற்கும் யாழ், மறைமாவட்ட ஆயர் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக தமிழர் பேரவையினர், யாழ். மறைமாவட்ட ஆயரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர். யாழ், மறைமாவட்ட ஆயரை இன்றைய தினம் சனிக்கிழமை சந்தித்து, அவருக்கு நாங்கள் மேற்கொள்ள உள்ள வேலை திட்டம் தொடர்பில் விரிவாக விளங்கப்படுத்தியதாக குறித்த சந்திப்பு தொடர்பில், உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் தெரிவித்தார்.

எமது திட்டத்தினை நல்ல ஒரு திட்டம் இதை தான் வரவேற்பதாக தெரிவித்த ஆயர், மக்கள் மயப்படுத்தப்பட்ட திட்டத்தினை தாம் எப்போதும் வரவேற்போம், மேன்மேலும் இந்த விடயத்தினை தொடர்ச்சியாக செயற்படுத்துமாறு, ஆயர் எம்மிடம் கோரினார் என தெரிவித்தார். இதேவேளை உலக தமிழர் பேரவையின் வருகை போலி தேசியம் பேசுகின்ற சில குழுக்களுக்கு தடையாக இருக்கலாம். ஆனால், எம்மைப் பொறுத்தவரை புலம்பெயர் அமைப்புகள் யாரும் இங்கு வரலாம். அவர்களை வரவேற்க நாம் தயாராகவே இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கட்சியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீ ரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத்  தெரிவித்தார். மேலும் , உலக தமிழர் பேரவையின் இமாலய திட்ட செயற்பாட்டை கடந்த காலங்களில் முயற்சித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நாம் வெளிப்படையாக யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலும் யுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு இரு தரப்புக்கும் கோரிக்கை விடுத்திருந்தோம். அப்போது உலக தமிழர் பேரவையினர் என்ன செய்தனர் என்பதனை இன்று சுயவிமர்சனம் செய்ய வேண்டும். கடந்த காலங்களில் இதேபோல் தங்களது பங்களிப்பினை இலங்கைக்கு வழங்கியிருந்தால் 30 வருட யுத்தத்தினை தடுத்து நிறுத்த அழுத்தத்தையாவது கொடுத்திருக்கலாம்.இருப்பினும் காலம் கடந்த பின்னராவது தாயகத்திற்கு திரும்பி இவ்வாறு அக்கறையுடன் செயற்படுவது மகிழ்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்தார்.

இவ்வாறு சர்வதேச புலம்பெயர் அமைப்புகள் எமது நாட்டின் அபிவிருத்தியில் ஈடுபட வேண்டும். பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். சந்தரப்பம் வழங்கப்படும் பட்சத்தில் ஜனநாயக தேர்தல் அரசியல் நீரோட்டத்திலும் பங்காற்ற வேண்டும்.இனப் பிரச்சினைக்கான தீர்வை தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகத்தான் அணுக வேண்டும் என்பதை உலக தமிழர் பேரவையின் நகர்வும் எடுத்துக்காட்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.