மக்களுடனான பேச்சு மூலம் அரசமைப்பு மாற்றத்தை உருவாக்க முடியுமென்றால் அதுவொரு பெரிய வெற்றி: உலகத் தமிழர் பேரவையுடனான சந்திப்பின் பின் சம்பந்தன் தெரிவிப்பு.
இலங்கையில் மூவின மக்களுடனான பேச்சு மூலம் தீர்வு கிடைத்தால் – அரசமைப்பில் மாற்றம் ஏற்பட்டால் அது மாபெரும் வெற்றியாகும்’ என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். அதிகாரப் பகிர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க ஒன்றியத்தின் தேரர்கள் நேற்று நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியபோதே சம்பந்தன் எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம், இரா.சாணக்கியன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.இதன்போது இலங்கையில் இன நல்லிணக்கத்துக்கான இமயமலைப் பிரகடனத்தைக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பியிடம் உலகத் தமிழர் பேரவையினர் மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க ஒன்றியத்தின் தேரர்கள் இணைந்து சமர்ப்பித்தனர்.
சந்திப்பின் நிறைவில் சம்பந்தனுடனான பேச்சு தொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தார். நாம் இந்த வேலைத்திட்டத்தை முன்னரே செய்திருக்க வேண்டும் என்று சம்பந்தன் தெரிவித்தார். எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் செய்திருக்க வேண்டும், நாங்கள் பல வருடங்கள் பின்தங்கியிருக்கின்றோம், இதை இப்போதாவது நீங்கள் செய்திருக்க முன்வந்திருப்பது மிகவும் முக்கிய விடயம், இதனை நாம் வரவேற்கின்றோம் என்றும் சம்பந்தன் கூறினார்.
மக்களுடனான பேச்சு மூலம் தீர்வு கொண்டு வருவது மிகவும் நல்ல விடயம், இதன் மூலமாக அரசமைப்பு மாற்றத்தை உருவாக்க முடியுமென்றால் அதுவொரு பெரிய வெற்றி என்றும் சம்பந்தன் தெரிவித்தார்’ என்றார்.எமது முயற்சியை எதிர்ப்பவர்கள் எம்மைச் சந்தித்த பின் தெளிவு கிடைக்காவிட்டால் விமர்சிக்கலாம்’ என்றும் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் ஊடகங்களிடம் மேலும் கூறினார்.