சுவிஸ் கன்ரனில் இருவரைச் சுட்டுக் கொன்ற நபர் பொலீஸாரிடம் சிக்கினார்!

பெருமெடுப்பில் தேடுதல் வேட்டை

Kumarathasan Karthigesu-பாரிஸ்

சுவிற்சர்லாந்தில் வலே(Valais) கன்ரனின் தலைநகரில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற இருவேறு சூட்டுச் சம்பவங்களில் 34 வயதான பெண் ஒருவரும் 41 வயதுடைய ஆண் ஒருவருமாக இருவர் கொல்லப்பட்டனர். மற்றொரு பெண் படுகாயமடைந்தார்.

சீயோன் (Sion) நகரில் 36 வயதான ஆண் ஒருவரே காலை நேரத்தில் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளார். அவர் இரண்டு இடங்களிலும் கண்டபடி துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுத் தப்பிச்சென்றுள்ளார். இந்தச் சூட்டுச் சம்பவங்களால் நகரில் பரபரப்புக் காணப்பட்டது.

தாக்குதலாளியைக் கைது செய்வதற்காக ஆயுதம் தாங்கிய நூற்றுக் கணக்கான பொலீஸார் வலே கன்ரன் பிரதேசத்தில் இன்று பகல் முழுவதும் தேடுதல்களை நடத்தினர்.

சில இடங்களில் பொலீஸார் வீதித் தடைகளை நிறுவியும் சோதனைகளை மேற்கொண்டனர். பலமணி நேரம் நீடித்த தேடுதல்களுக்குப் பின்னர் தாக்குதலாளியைப் பொலீஸார் இன்று பிற்பகல் வேளை கைதுசெய்துள்ளனர்.

கைதான சமயத்தில் அவர் எதிர்ப்பு எதனையும் காட்டவில்லை.

தாக்குதலாளி பொலீஸாரால் ஏற்கனவே அறியப்பட்டவர் என்றும் வலே கன்ரன் பகுதியில் பெயின்ட் பூசும் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர், கொல்லப்பட்ட பெண்ணை இதற்கு முன்னரும் துன்புறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

கொலைகளுக்கான காரணம் தெரியவரவில்லை. விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.