யுத்த நிறுத்தத்தை வீற்றோவால் தடுத்தது அமெரிக்கா! பிராந்திய போர் வெடிக்கும் என ஈரான் எச்சரிக்கை!
உள்ளாடையுடன் பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலின் பிடியில் காஸா களக்காட்சிகள் அதிர்ச்சி
(Photo :social media screen shot)
Kumarathasan Karthigesu-பாரிஸ்
புல்டோசர்களால் தரைமட்டமாக்கப்பட்டது போலத் தோன்றுகின்ற நிலப்பரப்பில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியப் போர்க் கைதிகள், கைகள், கண்கள் கட்டப்பட்டுத் தாழிடப்பட்ட நிலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற வீடியோக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. அந்தக் காட்சிகளது நம்பகத் தன்மை சரிவர உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும் இஸ்ரேலிய வீரர்களால் பாலஸ்தீனியக் கைதிகள் கண்கள் கட்டப்பட்டு அழைத்துச் செல்லப்படுகின்ற படங்களை ஏஎப்பி உட்பட சர்வதேச செய்தி நிறுவனங்கள் வெளியிட்டிருக்கின்றன.
வடக்கு காஸாவின் Beit Lahia என்ற பகுதியில் பாலஸ்தீனியக் கைதிகள் எனக் கூறப்படும் பலர் உள்ளாடைகளோடு தரையில் இருத்தி வைக்கப்பட்டிருக்கின்ற காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை பிபிசி நிறுவனம் பரிசீலித்த பின்னர் வெளியிட்டுள்ளது.
காஸாவின் சகல பகுதிகளுக்குள்ளும் இஸ்ரேலியப் படைகள் புகுந்துள்ள நிலையில் அங்கு மனிதப் படுகொலைகள், இன அழிப்புக்கள் இடம்பெறலாம் என்றவாறான பல எச்சரிக்கைகளை ஐ. நா. நிறுவனங்கள் வெளியிட்டிருக்கின்ற பின்னணியிலேயே இவ்வாறான போர்க்களக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
இதேவேளை – காஸா மீதான இஸ்ரேலின் போர் உச்சக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அங்கு பெரும் மனிதாபிமானப் பேரழிவு தோன்றியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பேரவலத்தில் சிக்கியுள்ள சிவிலியன்களைக் காப்பாற்றுவதற்குத் தற்காலிகமாக மனிதாபிமானப் போர் ஓய்வு ஒன்றை அறிவிக்கக் கோரும் அவசர பிரேரணை ஐ. நா. பாதுகாப்புச் சபையில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.
Photo:Getty Images——
ஐக்கிய அரபு அமீரகத்தினால்(United Arab Emirates) நூறு நாடுகளது ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட காஸா மனிதாபிமானப் போர் நிறுத்தப் பிரேரணையை அமெரிக்கா அதன் வீற்றோ(veto) அதிகாரத்தால் தடுத்து விட்டது.
அமெரிக்கா மத்திய கிழக்கில் நீண்ட கால அமைதிக்காகப் பாடுபடுவதாகக் கூறிவந்தாலும் , இந்த மிகத் துல்லியமான தருணத்தில் சண்டையை முடிவுக்கு கொண்டுவருவது “புத்திசாலித்தனமானது அல்ல” என்று கருதுகிறது.இந்தக் கட்டத்தில் போரை நிறுத்துவது “எதிர்காலப் போர்களுக்கே விதைகளைத் தூவும்” என்று. ஐ. நாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அமெரிக்கத் தூதர் விளக்கமளித்துள்ளார் .
இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் இந்தச் செயல் அரபு உலகில் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ஹமாஸ் இயக்கமும் அதனைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.
இஸ்ரேலிய சியோனிஸ அதிகாரத்தைத் (Zionist regime) தொடர்ந்து ஆதரித்துவருகின்ற அமெரிக்காவின் செயல், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாதவாறான “பிராந்தியப்” போர் “வெடிப்பு” (regional “explosion”) ஒன்றுக்கான சாத்தியத்தையே ஏற்படுத்தும் என்று ஐ. நாவுக்கான ஈரானின் பிரதிநிதி கடுமையாக எச்சரித்திருக்கிறார்.
பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் மனிதாபிமானப் போர் நிறுத்தத்துக்குரிய புதிய முன் முயற்சியை மீண்டும் தொடங்குமாறு பிரான்ஸ் வற்புறுத்தி உள்ளது.