COP-28ன் எதிர்பார்ப்புகள்.

நாம் உலகில் தனியாக வாழவில்லை என்பதையும், நம்மைப் போலவே ஏறக்குறைய 800 கோடி பேர் உள்ளனர் என்பதையும், நம் ஒவ்வொரு செயலும் மற்றவர்களையும் பாதிக்கின்றது என்பதையும் நாம் ஏற்றுக்கொண்டால், ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்யமாட்டோம். தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம் என்பது உண்மையெனினும், இன்னும் நாம் கற்றுக்கொண்டதன் துணைகொண்டு திருத்தி அமைக்க முன்வரவில்லை என்பதும் உண்மை.

நாம் ஒவ்வொருவரும் நன்றாக வாழவே விரும்புகிறோம், ஆனால் பூமியை கடுமையாக பாதிக்கும் வகையில் அதைச் செய்கிறோம் என்பதை மறுக்கமுடியாது. நாம் வளர்ந்துள்ளோம், வளமையான வாழ்க்கையைக் கொண்டுள்ளோம். ஆனால், நாம் கொடுத்த விலை என்ன, கொஞ்சம் நின்று சிந்திக்க நமக்கு நேரம் இருக்கிறதா?.

காடழித்தல் மற்றும் புதைபடிவ எரிபொருட்களை ஆற்றல் நோக்கங்களுக்காக சுரண்டியது உட்பட அனைத்தும், எந்த எதிர்மறை விளைவையும் ஏற்படுத்தாது என்று முதலில் நாம் நம்பினாலும், நாம் தவறு செய்ததை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொண்டிருக்கிறோம். இன்று, காலநிலை மாற்றம்தான் இன்றைய, மற்றும் எதிர்கால தலைமுறையினர் முன்புள்ள மாபெரும் சவால் என்பதையும் ஏற்றுள்ளோம்.

நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை பயன்படுத்துவதாலும், காடுகளை அழிப்பதாலும் கரியமிலவாயு உள்ளிட்ட வெப்பத்தை தக்கவைக்கும் பசுங்குடில் வாயுக்களின் வளிமண்டல அடர்த்தி வெகுவாக அதிகரித்துள்ளது. புவியின் மேற்பரப்பு வெப்பநிலை கடந்த 150 ஆண்டுகளில் 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.

இத்தகைய ஒரு பின்னணியில், புவிவெப்பம் அதிகரிப்பதை உலகின் எந்தவொரு நாடும் தனித்து தடுக்க முடியாது, உலகின் எல்லா நாடுகளும் ஓரணியில் திரளவேண்டும் என்கிற நோக்கத்தில் 1992 ரியோ புவி உச்சிமாநாட்டில் ஐ.நா. காலநிலை மாற்ற பணித்திட்டப் பேரவை உருவாக்கப்பட்டது. இதன் 28ஆவது மாநாடு (COP 28) 2023 நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு COP 27 எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் நடைபெற்றது. வரும் 2024ஆம் ஆண்டு COP 29 காலநிலை உச்சிமாநாடு கிழக்கு ஐரோப்பாவில் நடத்தப்பட உள்ளது.

காலநிலை மாற்றம் அல்லது சூழலியல் பிரச்னைகள் குறித்து, 1970களில் சூழலியலாளர்கள் பேசத் துவங்கினார்கள்.  எண்ணெய், நிலக்கரி, எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருளின் (Fossil Fuel) தீவிர பயன்பாட்டினாலும், தொழிற்புரட்சியின் நீட்சியில் உலகமயமாக்கலின் சிக்கலினாலும், நகரமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்க நிலையினாலும், இயந்திரம் மற்றும் இணையவழி சந்தையினாலும், மனிதகுலம் தன் சுற்றுச் சூழலை அழித்துவருகிறது என்றும், வருகிற தலைமுறைக்கு எந்த விதத்திலும் வாழத் தகுதியற்ற உலகத்தையே வழங்க இருக்கிறோம் என்றும் கவலைப்பட்டார்கள். அதில் ஒரு நியாயமும் இருந்தது. மனிதகுல வருங்காலம் குறித்த கவலையும் இருந்தது.

அதன் விளைவாக, 1992ல் ரியோ தி ஜெனெரோ என்ற இடத்தில் பூமி உச்ச மாநாடு நடந்தது.  அதன் முடிவுகளை 1994ல் 196 நாடுகள் ஆதரித்து கையெழுத்து இட்டன.  ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் குறித்த அமைப்பு உருவானது.  அந்த அமைப்பில், சம்பந்தப்பட்ட நாடுகளிலிருந்து, முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட பிரதிநிதிகள் இணைந்த உயர்மட்ட குழுவிற்குப் பெயர்தான் COP (Conference of the Parties).

COP1 அதாவது, COPன் முதல் கூட்டம் 1995ல் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்தது.  அதன் பின்னர் நடந்த கூட்டங்களில் COP3 கூட்டம் ஐப்பானின் கியோட்டோ நகரில் நடைபெற்றது.  வளர்ந்த நாடுகள், தங்கள் கரியமிலவாயுவின்  அளவை 5% குறைக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.  அதை கியோட்டோ ஒப்பந்தம் என அழைக்கிறார்கள்.  மேலும், 2012ல் தோகாவில் நடைபெற்ற மாநாட்டில், கியோட்டோ ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, கரியமிலவாயுவை குறைக்க வேண்டிய காலகட்டத்தை 2013லிருந்து 2020 என மாற்றினார்கள்.  இந்த நிலையில் 2015ல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடந்த COP21 கூட்டத்தின் முடிவுகளை பாரிஸ் ஒப்பந்தம் என்று அழைக்கின்றனர்.  அதன்படி, அதில் கையெழுத்திட்ட 196 நாடுகளும் இணைந்து, பூமியின் வெப்ப அளவை 2 டிகிரிக்கும் குறைவாகவே வைக்க முயற்சிப்பது, முடிந்தால் 1.5 டிகிரி அளவுக்கு குறைப்பது என்று முடிவானது.

தற்போது, அதாவது 2023ல் துபாயில் இடம்பெற்றுவரும் COP28 கூட்டத்தில், 200க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், வணிகத் தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசுகளுக்கிடையேயான அமைப்புகள், மதத் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஊடகப் பணியாளர்கள் உட்பட 30,000க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கிறார்கள்.  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்கு ஆவலாக இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அவரின் உடல்நிலை காரணமாக பங்கேற்கமுடியவில்லை. அதற்கு பதிலாக திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கலந்து கொள்கிறார்.

ஆற்றல் மாற்றத்தை வேகமாகக் கண்காணித்தல், காலநிலை நிதிநிலையைச் சரிசெய்தல்,

மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களில் கவனம் செலுத்துதல், அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியமைத்தல் என முக்கியக் கோணங்களில் விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், தீர்மானங்கள் எடுத்தல் இடம்பெற உள்ளன.

இந்த கூட்டம் எதற்கு என்ற கேள்வியை எழுப்புவதற்கு முன்னர், உலகின் இன்றைய நிலையை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

உலகம் மேலும் மேலும் வெப்பக்காடாக மாறிவருகிறது என்பது நாம் அறியாததல்ல. இதனால், பாதிப்புக்களின் ஒரு சக்கரச் சுழற்சி தொடர்ந்து நம்மை அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. முதலில் விவசாய வறட்சி. அடுத்து காட்டுத்தீ. இவைகளின் தொடர்ச்சியாக, பனி உருகுதல். இமயமலை பனிப்பாறைகளில் இருந்து பனி இழப்பு 2000மாம் ஆண்டு முதல் அதிகரித்துள்ளது. 1 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிப்பதால் ஒவ்வோர் ஆண்டும் சுமார் அரை மீட்டர் பனி உருகுகிறது. உதாரணமாக, 1975இல் இமயமலைப் பகுதி 87% பனியால் மூடப்பட்டிருந்தது, 2016இல் 72% ஆக குறைந்தது. அதாவது, அதன் நிறைவில் கால் பகுதியை இழந்துவிட்டது. அடுத்து, இந்த நூற்றாண்டின் இறுதியில் ஆல்ப்ஸ் 70% பனியை இழக்கக்கூடும் என்கின்றனர். 1900 முதல், உலகில் கடல் வெப்பநிலை ஏறக்குறைய 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. கடல் பனி குறைந்து உப்புத்தன்மை அதிகரித்துள்ளது.

பெருங்கடல் வெப்பமடைவதால், துருவப் பகுதிகளில் உள்ள பனி உருகி, உலக கடல் மட்டத்தை பாதிக்கும். கிரீன்லாந்தில், 60% கடல் மட்ட உயர்வு பனி உருகுவதால் ஏற்படுகிறது என்பது நமக்குத் தெரியுமா?. இதே நிலையில் பனி இழப்பு போக்கு தொடர்ந்தால், 2100வாக்கில், 400 மில்லியன் மக்கள் ஒவ்வோர் ஆண்டும் கடலோர வெள்ள அபாயத்தில் இருப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோம். கடல் மட்டங்கள் உயர்ந்து வருவது இலண்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. மறுபுறம், அலெக்ஸாண்ட்ரியா, கெய்ரோ, லோமே, கோட்டானோ, லாகோஸ் மற்றும் மாசாவா போன்ற தாழ்வான கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள பெரிய நகரங்களைப் பாதிக்கும். கடல் மட்டம் உயர்ந்து வருவதால் கரீபியன் மற்றும் பிற சிறிய தீவுகள் பாதிக்கப்படும். எல்லா நாடுகளிலும், கடல் மட்டங்கள் உயர்ந்து வருவது நன்னீர் வளங்களில் உப்பு நீர் ஊடுருவலை ஏற்படுத்தும். வேகமாக மூழ்கத் தொடங்கும் நகரங்களில் ஒன்றாக ஜகார்த்தா மாறிவிட்டது. இதனால் என்ன நடக்கும் என்பது தெரிகிறதா?. உள்நாட்டுப் பகுதிகளுக்கு மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள். கடல் மட்டம் உயரும்போது, வெனிஸ், ஷாங்காய், நியூ ஆர்லியன்ஸ், பாங்காக் உள்ளிட்ட நகரங்கள் பல சரிந்துவிடும் ஆபத்தில் உள்ளன. மியாமி நகர் கடல் மட்டத்திலிருந்து சுமார் இரண்டு மீட்டர் உயரத்தில் உள்ளது. நூற்றாண்டின் முடிவில் கடல்கள் நான்கு மீட்டர் உயரக்கூடும் என்ற கணிப்பால், இது முற்றிலும் நீரில் மூழ்கும் வாய்ப்பு உள்ளது என்பதே உண்மை.

அண்டார்டிக் பனிக்கட்டி ஆண்டுக்கு சராசரியாக 100 கன கிலோமீட்டர் வீதத்தில் சுருங்கி வருகிறது. ஈக்வடாரில், 80களில் இந்த பகுதியில் 92 சதுர கிலோமீட்டர் பனிப்பாறை இருந்தது, தற்போது இது 43 சதுர கிலோமீட்டர் மட்டுமே என்பதைக் காணும்போது காலநிலை மாற்றத்தின் அறிகுறிகள் தெளிவாகத் தெரிகிறது.

 கால நிலை மாற்றத்தால் கடல்கள் அமிலமாகின்றன, இதனால் கடல் வாழ் உயிரினங்கள் மடிகின்றன, குறிப்பாக பவளப்பறைகள் பாதிக்கப்படுகின்றன. துருவ கரடி என்பது வட துருவத்தில் நீண்ட காலமாக வாழ்ந்த ஒரு விலங்கு. அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக மேலும் மேலும் துருவ கரடிகள் இறக்கின்றன. உலகில் மீதமுள்ளவை 24 ஆயிரம் மட்டுமே எனும்போது, இன்னும் எத்தனை நாளைக்கு இந்த விலங்கினம் மறையாமல் இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

புவி வெப்பமடைதலுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய உயிரினங்களில் பவளப்பாறைகள் ஒன்றாகும். கடல்களின் வெப்பநிலை அதிகரிக்கும்போது, கால்சியம் குறைவதால் தொடர்ந்து வளர முடியாமல் போகிறது. ஆஸ்திரேலிய கடற்கரையை எடுத்துக்கொண்டோமானால், வெப்பமடைதல் காரணமாக இதுவரை, 1500 கிலோமீட்டர் பவளம் வெளிறியுள்ளது. அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், அனைத்து பவளப்பாறைகளும் பெரும்பாலும் மறைந்துவிடும். ஹவாயின் பவளப்பாறைகள் புவி வெப்பமடைதலால், மறைந்து போகும் அபாயத்தில் உள்ளன. ஆசியாவில் சுமார் 30% பவளப்பாறைகள் அடுத்த 30 ஆண்டுகளில் பல்வேறு அழுத்தங்கள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக மறைந்துவிடும்.

காலநிலை மாற்றத்தைக் கண்டு நாம் ஏன் அஞ்ச வேண்டும் என்று, வருங்கால சந்ததியினர் மீது அன்புள்ளவர்கள் ஒரு நாளும் கேட்க மாட்டார்கள். ஏனெனில்,

காலநிலை மாற்றம் நோய் பரவுதலை அதிகரிக்கிறது, கொசுக்களை வாழவிடுகிறது.

சராசரி வெப்பநிலையின் அதிகரிப்பு நம் அனைவரையும் ஏர் கண்டிஷனரை அதிகமாகப் பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்தும், இது மின்சார கட்டணத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதைத் தவிர, புவி வெப்பமடைதலை மோசமாக்கும். இந்தியாவில், புவி வெப்பமடைதலால் விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். காலநிலை மாற்றம் புலம்பெயரும் பறவைகளின் உயிர்வாழ்வை பாதிக்கிறது. 2050 ஆண்டில், சராசரி வெப்பநிலை 3ºC வரை உயரும் என்பது, நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது.

அமேசானிலேயே மழைப்பொழிவு குறைகிறது. 30% மேகம் உருவாவதற்கு தாவரங்கள் கிட்டத்தட்ட காரணமாகின்றன. ஆனால், அமேசானில் வனப்பகுதியின் அளவைக் குறைப்பதன் மூலம், இது ஒரு சக்கரச் சுழற்சிக்கு வித்திடுகிறது. குறைந்த மழை பெய்யும்போது அதிக மரங்கள் இறக்கின்றன, அதனால் இன்னும் குறைவாக மழை பெய்யும்.

2100ஆம் ஆண்டளவில், சுமார் இரண்டு பில்லியன் மக்கள், அதாவது, அப்போதைய உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு, காலநிலை அகதிகளாக மாறக்கூடும். காலநிலை மாற்றம் 100 மில்லியன் ஏழை மக்களை உருவாக்கும்.

ஒவ்வோர் ஆண்டும் 175 மில்லியன் குழந்தைகள் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுவார்கள் என்கிறது ஓர் ஆய்வு. இயற்கை பேரழிவுகள் ஆண்டுக்கு 26 மில்லியன் ஏழை மக்களை உருவாக்குகின்றன. ஒட்டுமொத்தமாக, ஒவ்வோர் ஆண்டும் பொருள் இழப்பின் மதிப்பு அரை பில்லியன் டாலர்களுக்கு மேல். 2030ஆம் ஆண்டுகளில், விவசாய உற்பத்தியில் 10 முதல் 25% வரை குறைவு எதிர்பார்க்கப்படுகிறது.

இவைகளையெல்லாம் மனதில் கொண்டு, புவிவெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்துவதற்கு, உலகளவில் வெளியாகும் கரிம உமிழ்வை 2030க்குள் 50% குறைக்க வேண்டும், 2050க்குள் நிகர பூஜ்யம் (Net Zero) ஆக்க வேண்டும். முடியுமா என்ற கேள்விக்கு இந்த, துபாயின் COP 28 கூட்டம் என்ன கூற வருகிறது என்பதை இம்மாதம் 12 வரை பொறுத்திருந்துப் பார்ப்போம்.