நாடாளுமன்றத்தில் குழப்பம்; சஜித்துக்கு இடையூறு விளைவித்தவர்கள் குறித்து விசாரணை.
நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்கள் உள்ளிட்ட சிலரே காரணமானவர்கள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதுதொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றிக்கொண்டிருந்த போது அவருடைய உரையை தடுக்கும் வகையில், ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் கூச்சல் குழப்பம் விளைவித்துக்கொண்டிருக்கின்றனர்.
அத்துடன், சபைக்கு நடுவே வந்தும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதியும் பொறுப்பாளி என உயர் நீதிமன்றம் கடந்த 14 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியிருக்கின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மட்டுமன்றி நிதி அமைச்சர்களாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜக்ஷ, ஜனாதிபதியின் செயலாளராக இருந்த பி.பி.ஜயசுந்தர, மத்திய வங்கி ஆளுநர்களாக இருந்த அஜித் நிவாட் கப்ரால் மற்றும் டபிள்யூ டி. லக்ஷ்மன, திறைசேரி செயலாளராக இருந்த எஸ்.ஆர்.ஆட்டிகல மற்றும் மத்திய வங்கியின் நிதிச்சபையின் உறுப்பினர்கள் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் சபையை கொண்டுச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டமையால் சபை நடவடிக்கைகளை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைத்துவிட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அக்கிராசனத்தில் இருந்து எழுந்துச் சென்றுவிட்டார்.