தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா வரவிருக்கிறார் என்பது தொடாபாக பாதுகாப்பு அமைச்சு விடுத்த தகவல்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா இன்னும் உயிருடன் இருக்கின்றார் எனக் காண்பிப்பதற்கான காணொளியொன்றை வெளியிடுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என்று வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள், இலங்கைப் புலனாய்வுப் பிரிவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாவீரர் தினத்தை முன்னிட்டு ஒரு குழுவினர் நவம்பர் 27ஆம் திகதியன்று இந்தக் காணொளியை வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும், இதற்காக விடுதலைப் புலிகளின் தலைவரின் உறவினர்களின் அனுமதி பெறப்பட்டுள்ளது என்றும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது என, கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் காணொளியைப் பயன்படுத்தி நோர்வேயில் உள்ள விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புக்கு நிதியைத் திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவுக்கு வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், இது தொடர்பில் விளக்கத்தை அளித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இது குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத், துவாரகா உயிருடன் இருப்பதைக் குறிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட வீடியோ தயாரிப்பு தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் இருப்பினும் சமூக வலைத்தளங்களை கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.புலிகளின் மற்றொரு மலிவான முயற்சி என்பதால், அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ள அவர், இந்த விடயம் தொடர்பாக தேவைப்பட்டால், அதற்கேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.