‘எனது மக்களின் விடுதலைக்காக’ எனும் ஆவண நூல் அறிமுகவிழா.
தமிழீழ தேசத்தை சுதந்திர தேசமாக, தன்னாட்சியுடன் நிலை பெறவைத்து, கருநிலை அரசை உருவாக்கி தமிழர்களுக்கு என்றும் வழிகாட்டும் தலைவர் அவர்களின் ‘எனது மக்களின் விடுதலைக்காக’ எனும் ஆவண நூல் அறிமுகவிழா 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக லண்டனில் இடம்பெற்றது.தலைவர் அவர்களது சிந்தனைகள், செவ்விகள், கடிதங்கள், வாழ்த்துச் செய்திகள், அரச மற்றும் ஐநா உயர்மட்ட கடிதப்பரிமாறல்கள், மாவீரர்நாள் உரைகள் உள்ளடங்கலான வரலாற்று ஆவணத் தொகுப்பாக இந்நூல் தொகுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் லண்டனின் பல முக்கிய தமிழமைப்புகளின் பிரதிநிதிகளும், போராளி, மாவீரர் உறவுகளும், தமிழீழ உணர்வாளர்களும், செயற்பாட்டாளர்களும், தமிழீழ மக்களுமாகக் கலந்து சிறப்பித்திருந்தார்கள். தமிழின் தலைமுறைச் செயற்பாட்டாளர்களான, தேசமறவர்களின் புதல்வியர் இந்நிகழ்விற்குத் தலைமை தாங்க, இளந்தலைமுறை தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களால் நிகழ்வுகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்வானதுஇ பொதுச்சுடரேற்றலுடன் இனிதே ஆரம்பமானது. பொதுச்சுடரினை மாவீரரான வீரவேங்கை சபரியின் தாயாரும், எழுத்தாளருமான திருமதி சாவித்திரி அத்துவிதானந்தன், போரியல், அரசியல் ஆய்வாளரான திரு.ரவி பிரபாகரன், நீண்டகாலமாத் தாயகப் பணியோடு இணைந்திருக்கும் திரு குகன், வேல்ஸ் சங்கமம் அமைப்பின் செயலாளர் திரு கலைரூபன்,இளைந் தலைமுறைத் தாயகச் செயற்பாட்டாளர் செல்வி பாரதி ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
அதனைத்தொடர்ந்து தேசியக்கொடிகளின் ஏற்றம் இடம்பெற்றது. பிரித்தானியத் தேசியக் கொடியினை, இறுதிவரை தாயகத்திலும் தொடர்ச்சியாப் புலத்திலும் தாயகப் பணியாற்றும் திருமதி மதுரா அவர்கள் ஏற்றிவைக்க, தொடர்ந்து, தமிழீழத் தேசியக்கொடியினை இளந்தலைமுறைச் செயற்பபாட்டாளரான செல்வி கலையரசி மணியரசன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மாவீரர்களுக்கான ஈகைச்சுடரினை மாவீரர்களான கப்டன் தேவகி, லெப் தனரஞ்சனி ஆகியோரது சகோதரர் திரு இறையமுதன் அவர்கள் ஏற்றிவைத்தார். இதனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. அகவணக்கத்தின் பின்னர் பொது மாவீரர் படத்திற்கான மலர்மாலையினை மாவீரர்களான கப்டன் மொறிஸ், கப்படன் மயூரன் ஆகியியோரது சகோதரியும், ஈழத்து எழுத்தாளருமான திருமதி சந்திரா ரவீந்திரன் அவர்கள் அணிவித்தார். இதனைத் தொடர்ந்து, ‘பறை விடுதலைக்கான குரல்’ பறை இசைப் போராளிகளால் தமிழர்களது பாரம்பரிய இசையான பறை இசை முழங்கி, விடுதலையைப் பறைசாற்றியது. தொடர்ந்து, இறுதிவரை தாயகத்திலும், தொடர்ச்சியாப் புலத்திலும் தாயகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் திருமதி கலைவிழி அவர்களின் உரை இடம்பெற்றது. திருமதி கலைவிழி அவர்களின் உரையில், தலைவரால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும், தமிழீழ தேசக் கட்டுமானத்திலும் பெண்கள் எவ்வாறு ஆளுமை மிக்கவர்களாக வளர்த்தெடுக்கப்பட்டார்கள் என்பது பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
இதன்பின்னர், மூத்த ஊடகர், நாடகர், ஏடகர் திரு தாசிசியஸ் அவர்கள் ஆசியுரையினை வழங்கியிருந்தார்.தொடர்ந்து, செல்வி கேனுஜா அவர்களினால் ‘தமிழை வாழ்த்தி, தலைவனைப்போற்றி’ எனும் சிறப்பு நடனம் இடம்பெற்றது.தொடர்ந்துஇ ‘எமது மக்களின் விடுதலைக்காக’ எனும் வரலாற்று ஆவணத்தைத் தொகுத்த திரு அன்ரன் பொன்ராசா அவர்களுடனான நேரடி நேர்காணலானது செல்வி முகிலினி அவர்களால் சிறப்புற ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்நேர்காணலில், இவ் ஆவணத்தைத் தொகுத்து வெளியிடுவதில் தனக்கிருந்த சவால்களைத் தெரிவித்ததோடு, இந்நூலில் இடம்பெறத் தவறிய ஆவணங்களைத் தமக்குத் தந்துதவுமாறும், இந்நூலில் இடம்பெறவேண்டிய திருத்தங்களையும் உள்வாங்கிக் கொள்வதாக திரு அன்ரன் பொன்ராசா அவர்கள் தெரிவித்திருந்தார்.இதன் பின்னர் இவ்விழாவின் சிறப்பம்சமான நூல் வெளியீடு இடம்பெற்றது.
காந்தள் கவிதை பின்னணியில் ஒலிக்க, நூலினை முன்னாள் மன்னார் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளரும், மூத்த போராளியுமாகவும் தாயகத்தில் பணியாற்றி, தொடர்ச்சியாகப் புலத்திலும் தாயகப் பணியோடு இணைந்திருக்கும் திரு சுரேஸ் அவர்கள் வெளியிட்டுவைக்க, விழாவிற்கு வருகை தந்திருந்த, எம் அடுத்த தலைமுறையினரான இளையோர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டமை மனநெகிழ்ச்சியான விடயமாக அமைந்திருந்தது. தொடர்ந்து, இவ் வரலாற்று ஆவண நூலின் முக்கியத்துவமும், அதன் மீதான தனது பார்வையும்பற்றி, செல்வன் பகலோன் வாமன் அவர்களது உரையும், ஆவணங்களைக் காப்பதன் முக்கியத்துவம்பற்றி, தமிழ் காடியனில்ல் செயற்பாட்டாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் செல்வி மிதுர்யா அவர்களின் ஆங்கிலத்திலான சிறப்புரையும் இடம்பெற்றன. இதன்பின்னர், தாயகத்திலும், தொடர்ச்சியாகப் புலத்திலும் தாயகப் பணியாற்றுபவரும், சத்திர சிகிச்சை நிபுணருமான கலாநிதி திரு சூரி அவர்களின் விசேட உரை இடம்பெற்றிருந்தது.
அவரது உரையில் தமிழீழ மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை பற்றிய தலைவர் அவர்களின் அக்கறை பற்றியும் மக்களையும், போராளிகளையும் காக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் தனது நேரடி அநுபவப் பகிர்வுகளைப் பகிர்ந்திருந்தமை நெகிழ்வாக அமைந்திருந்தது. தொடர்ந்து, தமிழீழத்தில் முழுமையாக தாயகப்பணியில் செயற்பட்டு, தொடர்ச்சியாகப் புலத்திலும் தாயகப் பணியாற்றிவரும் திரு அச்சுதன் அவர்களின் சிறப்புரை இடப்பெற்றிருந்தது. இச்சிறப்புரையில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இன்றைய சவால்களையும், இதனை நாம் எவ்வாறு எதிர்கொள்ளமுடியும் என்பது பற்றியும் குறிப்பிட்டதோடு, மாவீரர்கள், தலைவர் என்ற மாபெரும் அற ஒளியே தமிழர்கள் எல்லோரையும் நல்வழியில் தமிழர்களாய் ஒன்றிணைக்கும் மகத்தான சக்தி எனவும் தெரிவித்திருந்தார்.
இறுதியாக செல்வன் கயன் யோன்சனின் நன்றியுரையுடன், தேசியக் கொடிகளின் கையேற்பு இடம்பெற்றது. மாவீரர்களது கனவுகளை ஈடேற்ற, உறுதி பூணும்வகையில் ‘நம்புங்கள் தமிழீழம்’ நப்பிக்கைப் பாடல் ஒலிக்க விழா இனிதே நிறைவேறியது.2009 ன் பின்னரான 14 ஆண்டுகளில் தலைவர் அவர்களின் மேன்மையைக் கொண்டாடும் சிறப்பான விழாவாக இந்நிகழ்வு அமைந்ததாக விழாவிற்கு வருகை தந்தோர் மன நெகிழ்வோடு தெரிவித்திருந்தனர்.