ராஜபக்ச சகோதரர்களின் குடியுரிமையை பறிக்க வேண்டும்- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச-

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருந்தவர்களின் குடியுரிமையை பறிப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களாக மஹிந்த,  பசில், கோட்டா, ஆட்டிகல, கப்ரால் உட்பட 7 பேரின் பெயர்களை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவர்களால் தான் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆகவே, இந்த விடயம் தொடர்பில் ஆராய விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி நியமிக்க வேண்டும். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது. இவர்களது குடியுரிமையை பறிக்க முடியும் எனத்  தெரிவித்தார். இதேவேளை, இலங்கையை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியவர்களது குடி உரிமைகள் பறிப்பதற்கு விசேட பிரேரணையொன்றை அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தொகுதியின் பிரதம அமைப்பாளர் ரெஹான் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர், நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என உயர் நீதிமன்றம் கடந்த 14ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது.