தமிழர் பகுதிகளில் அத்துமீறி நுழையும் சிங்கள இனத்தவர்.

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் வடக்கு15ஆம் கட்டை பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்கள மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

புலிபாய்ந்தகல் பகுதியில் பெரும்பான்மையினத்தை சேர்ந்த மீனவர்கள் அத்துமீறி வாடி அமைத்து தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை பிரதேச செயலகத்தினால் அறிவித்தல் வழங்கப்பட்டு வாடிகளை அகற்றுமாறு கோரி பதாகை காட்சிபடுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொக்குதொடுவாய் 15ஆம் கட்டை பகுதியில் இவர்கள் வாடிஅமைத்து சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.குறித்த சம்பவத்தினால் மீனவர் சங்கத்தினர், கிராம அமைப்புக்கள் இணைந்து பெரும்பான்மை இனத்தை சேர்ந்த மீனவர்களிடம் பிரச்சினை தொடர்பாக கேட்டபோது குறித்த இடத்தினை பெரும்பான்மையினத்தை சேர்ந்த பிக்கு ஒருவர் தனது இடமாகவும், தாம் அதனை வாங்கி விட்டதாகவும் அதனாலேயே இங்கே வாடி அமைத்து தொழில் செய்வதாகவும் கூறியுள்ளார்.

குறித்த சம்பவ இடத்திற்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கொக்குதொடுவாய் கடற்தொழிலாளர் கிராமிய அமைப்பின் தலைவர் செல்வராசா மதியழகன், கொக்குதொடுவாய் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் சண்முகலிங்கம், மீனவ சங்கத்தின் பிரதிநிதி சிவகுரு போன்றோர் நேரில் சென்று பார்வையிட்டு இவ் விடயம் தொடர்பில் பிரதேச செயலக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதாக முடிவு எடுத்திருந்தார்கள். அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக தமிழ் மீனவர்கள் தொழில் செய்து வரும் இடங்களை பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். முல்லைத்தீவு புலிபாய்ந்தகல், தண்ணிமுறிப்பு, கொக்குதொடுவாய் வடக்கு என இவ்வாறு தொடர்ச்சியாக அத்துமீறி பெரும்பான்மையின சிங்கள மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.