முகநூலில் அவதூறு பரப்பியவருக்கு எதிராகவே முறைப்பாடு செய்தேன்-பேராசிரியர் வேல்நம்பி

யாழ் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் நபர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் எனது அனுமதியின்றி எனது புகைப்படத்தை பிரசுரித்து உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டிருந்தார். அதற்கு எதிராகவே நான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் வேல்நம்பி தெரிவித்துள்ளார்.

 ஊடகங்களில் யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தொடர்பில் முகநூலில் பதிவிட்ட நபருக்கு எதிராக பேராசிரியர் வேல்நம்பி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில்  அது தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் தூபியுடன் என்னை தொடர்புபடுத்தி, எனது அனுமதியின்றி எனது புகைப்படத்தை பயன்படுத்தி முகநூல்களில் விசமப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

குறித்த செய்தியை முகநூலில் பதிவிட்ட நபருருக்கு எதிராக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தேன்.பொலிஸ் விசாரணைகளில் இருந்து தப்புவதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் முள்ளிவாய்க்கால் தூபி தொடர்பில் தேவையற்ற விடயங்களை என் மீது சுமத்துவதற்காக பொய்யான தகவல்களை குறித்த நபர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளதாக  மேலும் தெரிவித்தார்.