அமெரிக்கா, தமிழர் பிரதேசங்களை சீனாவின் அத்துமீறலில் இருந்து பாதுகாக்க வேண்டும்:காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கம் வேண்டுகோள்.
வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கத்தினரால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் 2450வது நாளாக சுழற்சிமுறை போராட்டத்தினை முன்னெடுக்கப்படும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் உள்ள கொட்டகைக்கு முன்னால் குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றிருந்தது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் படங்களினை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் வடகிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தலையிட்டு தமிழர் பிரதேசங்களை சீனாவின் அத்துமீறலில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்மார்களாகிய நாம் எமது தமிழர் தாயகத்தில் உள்ள காணிகளிலும் மீன்பிடி நீரிடத்திலும் சீனாவின் அத்துமீறலை வன்மையாக எதிர்க்கிறோம்.ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எங்களின் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை, தமிழர்களின் நிலத்தை அபகரிப்பது ஒரு மீறலாகவே கருதப்படுகிறது.இலங்கையின் இணைத்தலைமை நன்கொடை நாடுகள் அரசியல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து தீர்வை வழங்குவது அது அவர்களின் பொறுப்பு.பயனற்ற 13வது திருத்தம் குறித்து இந்தியாவின் நண்பர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் விவாதிக்கின்றனர்.
எவ்வாறாயினும், சீனா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் கூட்டுப் படைகளால் எமது நிலங்கள் மற்றும் மீன்பிடி நீரைக் கைப்பற்றுவது பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு வலுவான முதுகெலும்பு தேவை. இலங்கை மீதான இந்தியாவின் நடத்தை தற்போது தாழ்வு மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. இந்திய அமைச்சர்கள் பிக்குகளுக்கும், போர்க்குற்றவாளி ராஜபக்சேக்களுக்கும் தலைவணங்கும் விதம் அவர்களின் தாழ்வு மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.
இந்து கோவில்களை இடிப்பவர்களையும் இந்துக்களை கொலை செய்ய சொல்லும் பிக்குகளையும் இந்து இந்தியர்கள் ஏன் தலைவணங்குகிறார்கள். அதனால்தான் நாங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடுகிறோம். அவர்களின் வெளியுறவுக் கொள்கை வலிமையையும் உறுதியையும் காட்டுகிறது.