ரணில் அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக கணிப்பு


இலங்கை அரசாங்கம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக நாடளாவிய ரீதியில் நடத்தபப்ட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது இலங்கையில் 10 வீதத்திற்க்கும் குறைவானவர்களே நம்பிக்கை வைத்துள்ளதாக கொழும்பை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் வெரிட்டே ரிசர்ச் அமைப்பு நேற்று வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது.

தேசத்தின் மனநிலை என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்பில் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் அங்கீகாரம் ஜூன் மாதத்தில் 21 வீதமாக இருந்து நவம்பரில் 9 வீதமாக குறைவடைந்துள்ளது. நான்கு மாதங்களில் இது அரைவாசிக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் அரசாங்கம் மீது மக்கள் கொண்டுள்ள திருப்தியானது 12 வீதத்தில் இருந்து 6 வீதமாக குறைந்துள்ளது.அதேபோல் பொருளாதார நம்பிக்கைக்கான சுட்டெண்ணும் 62 வீதத்திலிருந்து 44 வீதமாக சரிந்துள்ளது.இந்த கருத்துக்கணிப்பில் அனைத்து அம்சங்களிலும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில் பாரிய வீழ்ச்சியும், பின்னடைவும் ஏற்பட்டுள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ‘தேசத்தின் மனநிலை’ கருத்துக்கணிப்பு ஆண்டிற்கு மூன்று முறை நடத்தப்படுகிறது. இந்தக் கருத்துக்கணிப்பில் பிழை வரம்பு அதிகபட்சமாக 3 வீதத்திற்கும் குறைவாக இருக்குமாறு வரையறுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.இம்முறை இந்த ஆய்விற்காக நாடு முழுவதிலும் 1,029 பேரிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டன. இந்த கருத்தறியும் பணி கடந்த ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் இடம்பெற்றது.ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதோடு தொழிற்சங்கங்கள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் அதிகரித்த வரி காரணமாக மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாக தொழிற்சங்கங்கள் உட்பட பல தரப்பினர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வாழ்க்கைச் செலவீனங்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக கவலை வெளியிட்டு வருகின்றனமையும் குறிப்பிடத்தக்கது.