“தாக்குதல் விழிப்பு நிலை” பிரகடனம்! நாட்டு மக்களை மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு பணிப்பு!
மத்திய கிழக்குப் போர் பிரான்ஸில் எதிரொலி
Photo :AFP
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பிரான்ஸ் அரசு நாடு முழுவதும் தாக்குதல் விழிப்பு நிலையை (alerte “urgence attentat”) அறிவித்திருக்கிறது. எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு பிரெஞ்சுக் குடிமக்களை அரசு பணித்துள்ளது.
அதிபர் மக்ரோன் தலைமையில் எலிஸே மாளிகையில் இன்று மாலை முதல் நடைபெற்ற பாதுகாப்புக் கூட்டம் ஒன்றின் பின்னர் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா, நாடெங்கும் தாக்குதல் விழிப்பு நிலை பிரகடனம் செய்யப்படுவதை அறிவித்தார்.
பயங்கரவாத அச்சுறுத்தல் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புப் படிமுறைகளில் (Vigipirate system) மிக உயர்ந்த நிலையாகிய”தாக்குதல் விழிப்பு நிலை” (alerte “urgence attentat”) அறிவிக்கப்படுவது, நாட்டு மக்கள் அனைவரும் நாட்டின் நிர்வாகக் கட்டமைப்புகள் அனைத்தும் பாதுகாப்புத் தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்பதைக் குறிக்கிறது – என்று உள்துறை அமைச்சர் இன்றிரவு TF1 தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத் தீவிரவாதிகளிடையே மூண்டுள்ள போரின் எதிரொலிப்பாக பிரான்ஸில் இஸ்லாமியத் தீவிரவாத சக்திகளது தாக்குதல்கள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த பின்னணியில்-நாட்டின் வடகிழக்கில் பாடசாலை ஒன்றின் வரலாற்றுப்பாட ஆசிரியர் இஸ்லாமியத் தீவிரவாத இளைஞர் ஒருவரால் இன்று வெள்ளிக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்.
இந்தத் தாக்குதல் சந்தேகத்துக்கு இடமின்றி மத்தியகிழக்கு நிலைவரத்தின் எதிரொலிதான் என்று அமைச்சர் டாமன்னா உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய அதிரடிப் பாய்ச்சலைத் தொடர்ந்து மூண்டிருக்கின்ற இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிராந்தியப் போர், ஜரோப்பாவிலேயே மிக அதிக எண்ணிக்கையான இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் வசிக்கின்ற பிரான்ஸில் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. இவ்விரு இனசமூகத்தினரிடையேயும் பதற்றமும் மோதல்கள் ஏற்படக் கூடிய சாத்தியங்களும் அதிகரித்துள்ளன. அதேசமயம் இஸ்ரேலுக்கு உறுதியான ஆதரவைத் தெரிவித்துவருகின்ற பாரிஸ் அரசு, பாலஸ்தீன அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டப் பேரணிகள் அனைத்துக்கும் தடை விதித்துள்ளது. பொலீஸ் தடையை மீறி ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களை நடத்த இஸ்லாமியர்கள் முஸ்தீபு செய்து வருகின்றனர். உலகெங்கும் இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு இஸ்லாமிய மதத் தலைவர்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.