முதலிடத்தைப் பெற்று தேசிய மட்ட நிலைக்குத் தெரிவாகியது கொழும்பு புனித அந்தோனியார் ஆண்கள் கல்லூரி

இலங்கையில் நடைபெற்று முடிந்த தமிழ் மொழித்தின மாகாண மட்ட தமிழ் இலக்கிய நாடகப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று கொழும்பு புனித அந்தோனியார் ஆண்கள் கல்லூரி தேசிய மட்ட நிலைக்குத் தெரிவாகியுள்ளது.

இம்மாதம் 7ம் திகதி கொழும்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மேற்படி தமிழ் இலக்கிய நாடகப் போட்டியில் பங்கேற்ற ‘ஈகையின் இருக்கை’ எனும் கொழும்பு புனித அந்தோனியார் ஆண்கள் கல்லூரியின் நாடகமே தேசிய மட்டத்திற்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளது.

ஆசிரியை ம. சந்திரிக்கா பிரியங்கனியின் நெறியாள்கையின் கீழ் ஆற்றுகைசெய்யப்பட்ட இந்த நாடகத்தில் 12 மாணவப் போட்டியாளர்கள் நடிபாகமேற்று நடித்ததுடன் நான்கு பின்னணி வாத்தியக் கலைஞர்களும் பங்குபற்றி வெற்றியைத் தமதாக்கிக் கொண்டுள்ளனர். கல்லூரி அதிபர் திரு.யோ. இம்மானுவேல், பிரதி அதிபர்கள், ஆசான்கள், நாடகக் கலைஞர்கள், ஒப்பனைக் கலைஞராக பணியாற்றிய திருமதி.மேரிஅனஸ் போன்றோரின் தீவிர ஈடுபாட்டினோடும் கடும் பிரயத்தனத்தினோடும் கொழும்பு புனித அந்தோனியார் ஆண்கள் கல்லூரி முதல்த் தடவையாக மேற்படி போட்டியில் தேசிய மட்ட நிலைக்குத் தரமுயர்ந்துள்ளது.

அதேவேளை பிரிவு 4 தனிநடிப்புப் போட்டியின் மாகாண மட்டத்தில் இப்பாடசாலையைச் சேர்ந்த செல்வன். க.தருண்குமார் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்ட நிலைக்குத் தெரிவாகி தனது கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.