பராகிளைடர்களில் இஸ்ரேலுக்குள் குதித்த ஹமாஸ் ஆயுததாரிகள்!

 

Kumarathasan Karthigesu-பாரிஸ்

அதிரடிப் பாய்ச்சல் பற்றிய புதிய பரபரப்புத் தகவல்கள்

இன்னிசை நிகழ்ச்சியில் 250 பேர்வரை படுகொலை

பெரிய போர்க் கப்பலை நகர்த்தியது அமெரிக்கா

மத்திய கிழக்கில் வெடித்துள்ள போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள்களது விலைகள் உயரத் தொடங்கின. இஸ்ரேலுக்குத் தனது இராணுவரீதியான உதவிகளை அறிவித்துள்ள அமெரிக்கா அதன் மிகப் பெரிய ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் (Gerald R. Ford) என்ற நவீன விமானம் தாங்கிய போர்க் கப்பலை மத்திய கிழக்கிற்கு நகர்த்தியுள்ளது.

காஸாவில் இஸ்ரேலிய எல்லை அருகே வெளிநாட்டவர்கள் உட்படப் பல நூற்றுக்கணக்கான இளையோர் திரண்டிருந்த இன்னிசை நிகழ்வு ஒன்றே ஹமாஸ் தீவிரவாதிகளது அதிரடித் தாக்குதலின் முதலாவது இலக்காக இருந்துள்ளது. “Universo Paralello festival” எனப்படுகின்ற அந்த இளையோர் களியாட்டம் காஸா எல்லை அருகே பாலைவனம் போன்ற பரந்த மணற் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது.

ஆடல்பாடல், களியாட்டம், இன்னிசை என விடிய விடிய நடந்த நிகழ்வு மறுநாள் காலையும் தொடர்ந்து கொண்டிருந்த சமயத்திலேயே அந்தப் பிரதேசம் குண்டு மழையால் அதிரத் தொடங்கியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் இயக்கத் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது குறுகிய நேரத்துக்குள் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஷெல் குண்டுகளை ஏவிய அதேசமயத்தில் அவர்கள் இஸ்ரேலிய எல்லையை ஊடுருவுவதற்கு மனிதர்கள் தனித்துப் பறப்பதற்குப் பயன்படுகின்ற பராகிளைடர்கள் (paraglider) எனப்படும் மோட்டார் பொருத்திய தொங்கும் கிளைடர்களைப் (motorized hang gliders) பயன்படுத்தியுள்ளனர் என்ற தகவல் வீடியோ ஆதாரங்களுடன் வெளியாகியிருக்கிறது.

ரொக்கெட் குண்டுவெடிப்புகளால் வெகுண்டவர்கள் இன்னிசை நிகழ்விடத்தை விட்டுத் தப்பியோட முற்பட்ட வேளையில் – திடீரென ஆயுதம் தாங்கிய பலஸ்தீனத் தீவிரவாதிகள் “பராகிளைடர்கள்” மூலம் வான் வழியாக அந்த மணற் பகுதியில் அடுத்தடுத்துத் தரையிறங்கித் தாக்கத் தொடங்கியுள்ளனர். எதிர்ப்பட்டவர்கள் அனைவரையும் சுட்டுத் தள்ளியவாறு அவர்கள் முன்னேறத் தொடங்கினர் என்று சம்பவத்தில் உயிர்தப்பிய சிலர் இஸ்ரேலிய செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ், ஜேர்மனி அமெரிக்கா உட்பட மற்றும் சில வெளிநாடுகளின் குடிமக்களாகிய இஸ்ரேலியர்கள் பலர் இந்தச் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். களியாட்ட நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 250 உடல்கள் தற்சமயம் மீட்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினர் ஊடுருவியுள்ள இடங்களில் இன்னமும் நேரடி மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. 150 வரையான இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் ஹமாஸ் படையினரால் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">