36 ஆண்டுகள் கடந்தும் இன்னும் தமிழர்களின் உணர்வுகளை பாரத தேசம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை:நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கவலை.
ஈழத்தமிழர்கள் விடயத்தில் 36 ஆண்டுகள் கடந்தும் இன்னும் தமிழர்களின் உணர்வுகளை பாரத தேசம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்ற ஆழமான மனவேதனை எங்களிடம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 36வது ஆண்டு நிணைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.1954 ஆம் ஆண்டிலேயே தமிழர்கள் விடுதலை பெறக்கூடிய வகையில் ஈழ தேசியம் உணர்ச்சி கொண்டிருந்த போது பண்டா செல்வா ஒப்பந்த மூலம் அந்த போராட்ட எழுச்சி தணிக்கப்பட்டது.அடுத்து 1960களின் இவ்வாறான ஒரு போரியல் எழுச்சி உருவான போது அது டட்லி செல்வா ஒப்பந்தமாக வந்து எமது போராட்ட உணர்வுகள் தணிக்கப்பட்டது.நாங்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டோம் இரண்டு ஒப்பந்தங்களும் கிழித்தறியப்பட்டன. 1983 ஆம் ஆண்டின் பின்னர் எமது விடுதலை உணர்வு வீச்சுக்கொண்டிருந்த போது 1987 ஆம் ஆண்டிலேயே இலங்கை – இந்தியா ஒப்பந்தம், ஆயுதங்கள் ஒப்படைப்பு என்ற செயல்களின் நாங்கள் மழுங்கடிக்கப்பட்டோம் என அவர் சு ட்டிக்காட்டினார்.
மேலும், நாங்கள் இலங்கை – இந்திய படைகளால் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றோம். இந்த மண்ணிலே துரோகங்களாலும் காட்டிக் கொடுப்புக்களாலும் எங்களோடு இறந்தவர்களாலும் நாங்கள் அழிக்கப்பட்ட வரலாறுகள் தான் உள்ளது.அகிம்சை நாடாகிய காந்திய தேசத்துக்கு செய்தி சொல்ல வேண்டியவர்களாக நாங்கள் மாறினோம். உலகிற்கு அகிம்சையை போதித்த அறவழியில் போராடி வெல்லலாம் என்று ஆங்கிலேயருக்கு கற்பித்த இந்தியாவின் மகாத்மா காந்தி பிறந்த தேசத்தில் அந்த அறவழியால் காந்திய தேசம் எங்களுக்கு கண்ணை திறக்கும் என்ற நம்பிக்கையோடு அறவழியிலேயே, 36 ஆண்டுகளுக்கு முன் தியாகி திலீபன் தன்னுயிரை தியாகம் செய்தார்.
36 ஆண்டுகள் கடந்தும் ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா ஒரு சரியான பாதைக்கு இன்னமும் வரவில்லை. நாங்கள் தொடர்ந்தும் அழிக்கப்படுகின்றோம். மொழி ரீதியாகவும், இனரீதியாகவும், சமய ரீதியாகவும் நாங்கள் அழிக்கப்படும் போதெல்லாம் இந்தியாவில் பாரத் மாதா பற்றியும் பேசுகிறார்கள். இந்த பௌத்தமானது தமிழர்களின் நிலங்களை பறிக்கின்றதுஇ மதத்தை அழிக்கின்றது, இந்து ஆலயங்களை சிதைக்கின்றது. ஏன் இன்னும் சரியான புரிதல் இன்றி இந்தியா இருக்கின்றது என்ற மிகப்பெரிய கேள்வி எங்களிடம் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.எங்களுக்கான விடுதலையை பெற்று தருவதற்கு இந்தியா இன்னும் கரிசனை காட்டவில்லை என்பது மிக வேதனைக்குரிய ஒரு விடயமாகும்.
ஒரு தலைமையின் கீழ் வாருங்கள் நாங்கள் ஒன்றாக இந்த மண்ணிலே சாதிக்கின்ற போது தான் நாங்கள் ஒரு வெற்றியை நோக்கிய அணியாக நகர முடியும். நாங்கள் சிதைந்து போனால் சின்னாபின்னப்படுத்தப்பட்டால் நாங்கள் ஒவ்வொருவருக்கும் பின்னாலும் பிரிந்து சென்றால் நாங்கள் அழிந்து போவோமே தவிர, எதுவும் மிஞ்சாது’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.