பாரிஸ் வந்தடைந்த மன்னர் சார்ள்ஸ் வெற்றி வளைவில் மலரஞ்சலி.

வானத்தில் விமானங்கள் அணிவகுத்து மரியாதை

Photo :HANNAH MCKAY – AFP

Kumarathasan Karthigesu-பாரிஸ்

பிரிட்டிஷ் மன்னர் சார்ள்ஸ், அரசியார் கமீலா இருவரும் முதலாவது அரசு முறைப் பயணமாக இன்று பிற்பகல் பாரிஸ் வந்தடைந்தனர். அவர்கள் இருவரையும் பாரிஸ் ஒர்லி விமான நிலையத்தில் வைத்துப் பிரதமர் எலிசபெத் போர்ன் செங்கம்பளத்தில் வரவேற்றார். மன்னர் தம்பதிகள் அங்கிருந்து பாரிஸ் நகரின் மையத்தில் உள்ள Arc de Triomphe வெற்றி வளைவுக்கு வருகை தந்தனர். அதிபர் மக்ரோன் அங்கு வைத்து மன்னர் தம்பதிகளை வரவேற்றார். அங்கு உலகப் போர் வீரர் ஒருவரது சமாதியும் அணையா விளக்கும் அமைந்துள்ள நினைவிடத்தில் மன்னரும் மக்ரோனும் ஒன்றாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மன்னர் சார்ள்ஸ் அங்கு அணையாமல் ஒளிர்கின்ற விளக்கைத் தூண்டி விட்டார். அச்சமயம் மணி ஒலிக்கவிடப்பட்டது.

Photo :Thomas SAMSON / AFP

பின்னர் மன்னர் தம்பதிகளும் மக்ரோன் தம்பதிகளும் நினைவிடத்தில் படை வீரர்களது அணிவகுப்பை ஏற்றுக் கொண்டனர். அவ்வேளை La patrouille de France என்று அழைக்கப்படுகின்ற வாண வேடிக்கை புரியும் விமான அணியினர் பாரிஸ் வான்பரப்பு மீது பறந்து தேசியக் கொடிகளின் மூவர்ணங்களை வானில் உருவாக்கி மன்னருக்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து எலிஸே மாளிகைக்குச் சென்றனர். அவர்களது வாகன அணி சென்ற வீதிகளில் இரு புறங்களிலும் காணப்பட்ட மக்கள் “மன்னர் நீடூழி வாழ்க” என்று கோஷம் எழுப்பினர்.

மன்னர் சார்ள்ஸும் மக்ரோனும் எலிஸே மாளிகையில் இருந்து வெளியேறிக் கால் நடையாக அருகே உள்ள பிரிட்டிஷ் தூதரகத்துக்கு நடந்து சென்றனர். மக்ரோன் அன்பளிப்புச் செய்த ஓர்க் மரக் கன்று (oak tree) ஒன்றைச் சார்ள்ஸ் பிரிட்டிஷ் தூதரக பூங்காவில் நாட்டினார்.

மூன்று நாள் விஜயமாக வருகை தந்துள்ள மன்னர் சார்ள்ஸ், பாரிஸ் சத்தோ து வேர்சாய் அரண்மனையில்  (Palace of Versailles) இன்று முன்னிரவு அதிபர் மக்ரோன் அளித்த அதி உயர் இராப்போசன விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார். அரண்மனையின் கண்ணாடி மண்டபத்தில் அளிக்கப்பட்ட அந்த அரச விருந்தில் பிரான்ஸின் அதி முக்கிய பிரமுகர்கள் 150 பேர் பங்குபற்ற இருந்தனர்.

மன்னர் தம்பதிகள் நாளை வியாழக்கிழமை பாரிஸின் புற நகரமாகிய SaintDenis பகுதிக்கும் விஜயம் செய்வர். பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் நாட்டின் தென் மேற்கில் இங்கிலாந்து மக்கள் அதிகமாக வசிக்கின்ற போர்தோ( Bordeaux) பிராந்தியத்துக்குச் செல்வர்.

பிரிட்டிஷ் மன்னரது வருகையை ஒட்டி பாரிஸ் நகரப் பகுதிகளில் பலத்த பொலீஸ் காவல் காணப்பட்டது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">