ராட்சத வெள்ளம் லிபிய நகரத்தை துடைத்தழித்தது!ஐயாயிரம் பேர் பலி!!

Kumarathasan Karthigesu-பாரிஸ்

காணாமற்போன பல நூறு பேரைக் கடல் விழுங்கியது, மூர்க்கமாகத் தாக்கிய மத்தியதரை சூறாவளி

மொரோக்கோ பூகம்பம் ஏற்படுத்திய அதிர்ச்சி அடங்குவதற்குள் அயல் நாடான லிபியாவில் மற்றொரு பெரும் இயற்கை அழிவு ஏற்பட்டிருக்கிறது.

கடும் சூறாவளியுடன் கூடிய வெள்ளப் பெருக்கு லிபியாவின் கிழக்கு டேர்னா (Derna) நகரத்தைத் துவம்சம் செய்த காட்சிகள் உலகம்முழுவதையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களது கதறல்கள் காணொலிக் காட்சிகளாக சமூக ஊடகங்களில் பரவியுள்ளன.

கடந்த சில வார காலமாக நீடித்த கடும் வெப்பத்துக்குப் பின்னர் டானியல் (Storm Daniel) எனப் பெயரிடப்பட்ட புயல் லிபியாவைத் தாக்குவதற்கு முன்பாக கடந்த வாரம் துருக்கி, கிரேக்கம், பல்கேரியா போன்ற நாடுகளைத் தாக்கியிருந்தது. பின்னர் அது லிபியாவின் மத்தியதரைக் கடல் கரையோரங்களைத் தாக்கிய போது கொட்டித் தீர்த்த மழை பெரும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியது. சுமார் எட்டு மாத காலத்தில் பெய்திருக்க வேண்டிய மழை ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது. அதனால் இரண்டு அணைக்கட்டுகள் உடைப்பெடுத்தன.

சுனாமிப் பேரலை போன்று மூர்கமாக டேர்னா நகருக்குள் புகுந்த வெள்ளம் வீடுகளையும் கட்டடங்களையும் வாரி அடித்துச் சென்றது. நகரின் மூன்றில் ஒரு பகுதி நீருக்குள் மூழ்கியது. குடியிருப்புக் கட்டடங்கள் அவற்றில் தங்கியிருந்தவர்களோடு சேர்த்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

ஆயிரக்கணக்கானவர்களது உடல்கள் கடற்கரைப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.”உலகத்தின் கடைசி நாள் என உணர்ந்தோம்” என்று உயிர் தப்பியவர்கள் தங்களது திகில் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.

(Photo :Jamal Alkomaty/AP Photo)

குறைந்தது ஐயாயிரத்து 200 பேர் உயிரிழந்திருப்பதை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் பல நூற்றுக் கணக்கானோர் வெள்ளத்துடன் அடித்துச் செல்லப்பட்டு கடலோடு காணாமற்போயுள்ளனர் என்று சொல்லப்படுகிறது. செஞ்சிலுவைச் சங்கத்தின் தகவலின் படி குறைந்தது பத்தாயிரம் பேர் காணாமற் போய்விட்டனர் என அறிவிக்கப்படுகிறது. லிபியா நாடு இரண்டு போட்டி அரசாங்கங்களது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் மீட்புப் பணிகளை முன்னெடுப்பதிலும் சேத விவரங்களைக் கணக்கெடுப்பதிலும் குழப்பங்கள் காணப்படுகின்றன.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரச நிர்வாகம் தலைநகர் திரிப்போலியை மையமாகக் கொண்டு ஆட்சி செய்கிறது. மற்றொரு அரசாங்கம் டேர்னா நகரை உள்ளடக்கிய கிழக்கு பெங்காசியைத் தளமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

பேரழிவு ஏற்பட்ட பகுதிக்கு சர்வதேச உதவிகள் விரைகின்றன. பிரான்ஸ் அரசு ராணுவ மற்றும் சிவில் மருத்துவர் குழுவை உள்ளடக்கிய நடமாடும் மருத்துவமனை ஒன்றை பெங்காசி நகரப்பகுதிக்கு அனுப்பியுள்ளது.

படம் :நடமாடும் மருத்துவமனைக்கான உபகரணங்களுடன் லிபியா புறப்படத் தயாராகின்ற பிரான்ஸின் சரக்கு விமானம்.

வெப்பமண்டல சூறாவளி மற்றும் சூறாவளிகளின் பண்புகளைக் கொண்ட இந்த மத்திய தரைக்கடல் புயல்கள் வருடத்திற்கு ஒன்று முதல் மூன்று முறை மட்டுமே ஏற்படுகின்றன, இந்தப் புயல்கள் உருவாகுவதற்கு வெப்பம் மற்றும் ஈரப்பதம் இரண்டினதும் மேலெழுகைகள் அவசியம் . ஆயினும் கடந்த பல வாரங்களாக கிழக்கு மத்திய தரைக்கடல் மற்றும் அத்திலாந்திக் சமுத்திரம்

ஆகியவற்றின் கடலடி வெப்பநிலை வழமையை விட மூன்று டிகிரி உயர்ந்து காணப்பட்டது. அதன் காரணமாகவே அதிக தீவிரமான மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">