சிறப்புக் குழந்தைகளின் கனவு இல்லம்

- அனுஷா சேகர் -

இம் மாதம் முதலாம் திகதியன்று எமது “தமிழ் சிறப்புக் குழந்தைகள்” T.S.C (Tamil  special children UK) அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட தொண்டுநடை (Charity walk) நிகழ்வில் நான் கலந்துகொண்டதானது மிகுந்த மன நிறைவைத் தந்தது. இந்த நடைபயண நிகழ்வானது இரண்டு நோக்கங்களுக்காக நடாத்தப்படுகிறது.

ஒன்று,

சிறப்புக் குழந்தைகள் தொடர்பாக மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது.

மற்றையது,
பிரித்தானியா வாழ் எமது தமிழ்ச் சிறப்புக் குழந்தைகளின் எதிர்கால நலன் குறித்த தொலைநோக்குச் சிந்தனையுடன் T.S.C யினரால் சிறப்புக் குழந்தைகளுக்கான ஒரு கனவு இல்லம் அமைக்கும் திட்டத்திற்கான நிதி மற்றும் ஆதரவைத் திரட்டுதலுக்கானது.
எதிர்காலத்தில் நிறுவப்படயிருக்கும் இக் கனவு இல்லமானது, தமிழ்ச் சிறப்புக் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான குடியிருப்பாக அமைவதோடு, பெற்றோர்களாகிய நாங்கள் இல்லாத காலத்தில் எமது பிள்ளைகளை பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வழி வகுக்கும் என்பதே எமது நம்பிக்கையாகும்.
பொதுவாக எமது தமிழ்ச் சமூகத்தில் சிறப்புக் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லை என்பதே எனது அனுபவ அவதானிப்பாகும். ஏனெனில், எமது சமூகத்தவர்களில் பலர் சிறப்புக் குழந்தைகளைப் பார்க்கும் கண்ணோட்டமானது விகற்பமாக உள்ளது. பொது இடங்களுக்கு குழந்தைகளைக் கூட்டிச் செல்லும்போது மற்றவர்கள் பார்க்கும் விதமும், குழந்தைகளைச் சுட்டிக்காட்டி தங்களுக்குள் கிசுகிசுத்துக் கதைப்பதுமான நடவடிக்கைகள் என்பன என்போன்ற சிறப்புக் குழந்தைகளின் பெற்றோரை மிகவும் மனப் பாதிப்புக்குள்ளாக்குகிறது.
எமது குழந்தைகளின் நடவடிக்கைகளையும், துருதுரு தன்மையையும் பார்த்து பெற்றோரை எடைபோட ஆரம்பித்துவிடுவார்கள். இவர்கள் மோசமான பெற்றோர் இவர்களுக்குப் பிள்ளைகளை வளர்க்கத் தெரியாது. எப்படி வளர்த்து வைத்திருக்கின்றார்கள் பாருங்கள் என்ற பேச்சுக்களும் அப்பப்போது எங்கள் காதுகளில் விழுவதுண்டு. அது மட்டுமல்லாது சிலர் அதற்கும் மேலாகச் சென்று இவர்கள் முற்பிறவியில் செய்த பாவம் தான் இவர்களுக்கு இப்படியொரு பிள்ளை கிடைக்கக் காரணம் என்று சொன்னதையும் கேட்டிருக்கிறேன். இன்னும் மோசமான மனநிலைகொண்ட  சிலரால் சிறப்புக் குழந்தைகளும், பெற்றோர்களும் பொது இடங்களில் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதனால் சிறப்புக் குழந்தைகளைக் கொண்ட பல குடும்பங்கள் மன உளைச்சல்களுக்கு உள்ளாவதோடு சமூகத்திலிருந்து ஒதுங்கி சுய தனிமைக்குள் தள்ளப்படுகின்றார்கள்.
நாம் வாழும் இந்தச் சமூகத்தில் இன்னுமொரு தவறான கணிப்பு அல்லது புரிதல் இருக்கிறது அதாவது, சிறப்புக் குழந்தைகளுடன் தங்கள் Normal குழந்தைகளைச் சேர விடமாட்டார்கள். ஏனெனில் சிறப்புக் குழந்தைகளிடம் இருக்கும் சில நடத்தைகள் தங்கள் குழந்தைகளுக்கும் தொற்றிவிடுமோ? அல்லது பாதித்து விடுமோ? என்ற அறியாமையிலான பதட்டத்தில் எங்கள் குழந்தைகளைத் தள்ளியே வைத்துவிடுகிறார்கள்.
இப்படிச் சிறப்புக் குழந்தைகளாகப் பிறந்தது அவர்களின் தவறா? அல்லது இப்படிப் பெற்றது பெற்றோர்களின் தவறா? இதில் யாரைக் குற்றம் சொல்ல முடியும்? காரணங்கள் என்னவென்று யாருக்குமே தெரியாது. விஞ்ஞான ரீதியாகக்கூட இதற்கான சரியான விளக்கம் இன்னமும் கண்டறியப்படவில்லை. இதனால் இருக்குமோ! அதனால் இருக்குமோ! என்ற சந்தேகங்கள் தான் உள்ளன. இப்படியிருக்கையில் மற்றவர்களின் இத்தகைய கதைகளும், புறக்கணிப்பும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்த்தான் இருக்கும். ஆகவே தயவு செய்து எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரங்களைத் தராமலாவது இருங்கள்.
சமூகத்தில் எல்லோருமே அப்படியான மனநிலை கொண்டவர்கள் அல்ல, புரிந்துணர்வு கொண்ட நல்ல கருணை மனம் படைத்தவர்களும் நிறைய உண்டு. ஆனாலும் புரிதல் அற்ற ஒரு சிலரின் இத்தகைய நடவடிக்கைகளே எம்மைப் பெரிதும் பாதிக்கிறது.
அண்மைக்காலமாக நான் பல சிறப்புக் குழந்தைகளைக் கொண்ட இளம் பெற்றோர்களைச் சந்தித்திருக்கின்றேன். தங்களுக்கு இப்படியொரு குழந்தை இருப்பது ஊர் உலகத்திற்குத் தெரிந்தால் என்ன நினைப்பார்களோ? சொல்லுவார்களோ? என்ற பயமும், தாழ்வு மனப்பான்மையும் அவர்களை ஆட்கொண்டிருக்கிறது. இதனால் ஏற்படும் மன அழுத்தங்களினால் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளாது சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இப்படியான ஒரு நிலைமை ஏன் இந்தச் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்கு வரவேண்டும்? இதற்குக் காரணம் இந்தச் சமுதாயமும், சுற்றுச் சூழலும் தானே. இத்தகைய காரணிகளால் மனமுடைந்து தங்களின் அன்றாட வாழ்வியல்ச் சந்தோசங்களைக்கூட அனுபவிக்க முடியாமல் முட்டி மோதி விரக்தியுற்ற நிலையில் எத்தனை குடும்பங்கள் உள்ளன. எனவேதான் இந்த நிலை மாறவேண்டும். எங்கள் குழந்தைகளுக்கு இந்தச் சமூகத்தில் கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அவர்களும் அவர்களைப் பெற்றவர்களும், அவர்களுடன் பிறந்தவர்களும் நின்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ வழி செய்யவேண்டும் என்ற நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட T.S.C  அமைப்பின் தொலைநோக்குச் சிந்தனையே இந்தக் கனவு இல்லமாகும். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு சிறப்புக் குழந்தைகளின் பெற்றோராகிய நாங்கள் கூட்டுக் குடும்பமாக மிகவும் பலமாகவும், ஒற்றுமையாகவும் செயற்பட்டு வருகின்றோம் என்பதை உணர்த்தும் விதமாகவே இந்த தொண்டுநடை (Charity walk) அமைந்திருந்தது.
எல்லாச் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்கும் உள்ள ஒரே பெரும் பயம் எங்களுக்குப் பிறகு எங்கள் குழந்தைகளுக்கு என்ன நடக்குமோ  என்பதுதான். நான் உட்பட நான் சந்தித்த எல்லாச் சிறப்புக் குழந்தைகளின் தாய்மார்களின் எண்ணமும், வேண்டுதலும் இறுதிப் பயணத்தில் தாங்கள் போகும்போதே பிள்ளைகளையும் கூட்டிச் சென்றுவிட வேண்டும் என்பதாகவே இருக்கிறது. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இது கொடுமையான எண்ணம் போல் தோன்றலாம். ஆனால் அவர்களின் நிலையில்?
சிறப்புக் குழந்தைகளின் தந்தையர்களின் நிலையும் பரிதாபகரமானது. தங்கள் கவலைகளை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் மனதுக்குள்ளேயே எல்லாவற்றையும் போட்டுக் குமைந்தபடி நடைபிணங்களாகவே நடமாடித் திரிகின்றார்கள்.
தாங்கள் இல்லாமல் இந்தச் சிறப்புக் குழந்தைகள் எப்படி இந்த உலகில் வாழ்வார்கள்? என்ற பயமும் பதட்டமும் மட்டுமன்றி, சிறப்புக் குழந்தைகளுடன் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கும் இவர்கள் ஒரு பாரமாக இருந்துவிடக்கூடாது. இவர்களால் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணமே எப்போதும் பெற்றோருக்கு உண்டு.
இவை மட்டுமல்லாமல் தற்போது உலகம் முழுவதும் சிறுவர் காப்பு இல்லங்களிலும், முதியோர் இல்லங்களிலும் (care home) Residential குடியிருப்புகளிலும் உடல், உளவியல் ரீதியாக நடைபெறும் மோசமான முறைகேடுகளை மட்டுமல்லாமல் பாலியல் துஷ்பிரயோகங்களையும், வதைகளையும் பல காணொளிகளில் காண முடிகிறது. சரியான உடை, உணவு, சுகாதாரம் போன்ற அத்தியாவசிய தேவைகள் கூட சில இடங்களில் சரியாகப் பூர்த்திசெய்யப்படுவதில்லை. மருத்துவ உதவிகள் தேவைப்படும்போது அவர்கள் அழைத்துச் செல்லப்படாமல் அலட்சியமாக இருப்பது, புறக்கணிப்பது போன்ற செய்திகளையும் அறிய முடிகிறது. இப்படியான செய்திகளை அன்றாடம் கேட்கும்போதும், பார்க்கும்போதும் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோராகிய எங்களுக்குக் குலை நடுங்குகிறது. ஜயோ நாளை நாங்கள் இல்லாதபோது நமது குழந்தைகளுக்கும் இதே நிலைதானா என எண்ணி எத்தனை பகல்களில் நிம்மதியை இழந்திருக்கின்றோம் எத்தனை இரவுகளில் தூக்கத்தை தொலைத்திருக்கின்றோம்.
எனவேதான் பெற்றோராகிய நாங்கள் T.S.C என்ற அமைப்பினூடாக இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எமது குழந்தைகளுக்காக ஒரு சொந்தக் குடியிருப்பை அமைத்து, அதில் அவர்கள் பாதுகாப்பாகவும், சந்தோசமாகவும் வாழ்வதற்கான வழிவகைகளை செய்ய முயற்சிக்கின்றோம். இதற்குப் பக்க பலமாக சிறப்புக் குழந்தைகளின் உடன்பிறப்புகளும் இருப்பார்கள் என்ற வகையில் பெற்றோராகிய எங்களுக்கு ஓரளவுக்கு நிம்மதியே.
நமது சொந்தக் குடியிருப்பு என்றால் பெற்றோர்களும், உடன்பிறப்புகளும் அடிக்கடி சென்று அவர்களை பார்வையிடலாம். எப்போதும் அவர்களை எங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருக்கலாம். அவர்களுடன் சேர்ந்து விளையாடலாம், கற்பிக்கலாம் அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளைச் சமைத்துப் பரிமாறலாம். இப்படியாகப் பல நன்மைகள் கிட்டும். இவை மட்டுமன்றி எங்களுக்குப் பின்னான காலங்களில் உடன்பிறப்புகளுக்கும் பாரமாக இருக்கமாட்டார்கள் போன்ற நல்ல நோக்கங்களையிட்டுத்தான் சிறுகச் சிறுகச் சேமித்து எமது குழந்தைகளின் எதிகாலத் திட்டத்திற்கு அத்திவாரம் அமைக்க ஆரம்பித்துள்ளோம்.
சென்ற வருடம் நிகழ்ந்த தொண்டுநடைப் பயணத்தில் பங்காளர்களாக மட்டும் கலந்து சிறப்பித்த எங்கள் இளம் சமுதாயம் இந்த வருடம் எங்கள் தோள்களில் இருந்த சுமைகளை தாங்களே சுமப்பாதாக முன்வந்து மார்தட்டி நின்றதைப் பார்க்க மிகவும் மகிழ்வாக இருந்தது. நாங்களும் இதுதான் தருணமென்று கொஞ்சம் பின்வாங்கி பொறுப்புக்களை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு உதவிக்கரம் மட்டும் நீட்டினோம். இளைய தலைமுறை என்றால் சொல்லவா வேண்டும் இன்றைய நவீன தொழில்நுட்பங்களைக் கையாண்டு நடை பயணத்தில் இணைந்தவர்கள் எவ்வாறு தங்கள் பெயர்களைப் பதிவு செய்வது என்பதிலிருந்து T.S.C just giving எங்கள் பக்கத்தின் QR குறியீட்டைப் பயன்படுத்தி நன்கொடைகளை எவ்வாறு வழங்குவது என்பது வரையிலான சகல விடயங்களையும் திறம்படச் செய்த எமது இளையோரை பாராட்டாமல் விடமுடியாது. நாங்கள் ஒரு குழுவாக, கூட்டுக் குடும்பமாக எமது இளையோரையும் இணைத்து மற்றுமொரு வெற்றிகரமான நிகழ்வை நடாத்தியுள்ளோம் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகின்றோம். எதிர்காலத்தில் T.S.C யை கையேற்று திறம்பட நிர்வகிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் இன் நிகழ்வு எமக்குத் தந்துள்ளது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஜந்து இளம் தலைமுறையினரை அழைத்திருந்தார்கள். அவர்களது அற்புதமான திறமைகள் எங்களை மெய்சிலிர்க்க வைத்தன. ஆடல்கள், பாடல்கள், கதைகள் என்று குழந்தைகளையும் பெற்றோர்களையும் குதூகலிக்க வைத்தார்கள். இந்தியச் சினிமா நடிகர்களைப் பார்த்து வியக்கும் எமது சமூகத்தில் இப்படி எமது உள்நாட்டுக் கலைஞர்களை அங்கீகரித்து வரவேற்றுக் கெளரவப்படுத்திய எமது இளம் சமுதாயத்தினருக்கு பாராட்டுக்கள். இவர்களின் அழைப்பை ஏற்று தமது பரபரப்பான சூழலிலும் நேரம் ஒதுக்கி வந்து நிகழ்வைச் சிறப்பித்தவர்களுக்கு T.S.C குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மற்றவர்களைப் பாராட்டுவதிலும், வாழ்த்துவதிலும் எமது சிறப்புக் குழந்தைகளுக்கு நிகர் அவர்களே தான். நாங்கள் ஒன்றும் சொல்லிக்கொடுக்காமல் அவர்களாகவே முன்வந்து சிறப்பு விருந்தினர்களை கட்டித்தழுவி கைகள் குலுக்கி கதைகள் பேசி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதை பார்த்தபோது மனம் நெகிழ்ந்துபோனது. நாங்கள் சரியான பாதையில் தான் பயணித்துக்கொண்டிருகின்றோம் என்ற மனத் திருப்தியும் ஏற்பட்டது. இந்தப் பாதையில் நாங்கள் களைத்து ஓய்ந்துவிடாமல் எங்கள் கனவையும், இலட்சியத்தையும் அடையும்வரை ஓயாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருப்போம் என உறுதி எடுத்துக்கொள்கின்றோம்.
தயவுசெய்து எங்களை ஆதரிக்க விரும்பினால் உங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் இவை தொடர்பான செய்திகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்களுடன் சேர்ந்து எங்கள் கனவை நிஜமாக்க உதவ விரும்பினால் உங்கள் நன்கொடைகளையும் அளிக்கலாம் என்பதையும் நன்றியுடன் அறியத்தருகின்றோம்.
லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு என்ற பாடலை மனதிற் கொண்டபடி…