கலவரத்தில் ஈடுபட்ட இளவயதினரின் குடும்பங்களுக்கான கொடுப்பனவுகளை நிறுத்த முஸ்தீபு!

Kumarathasan Karthigesu-பாரிஸ்

பிரேரணை தயார் என்கிறார் குடியரசுக் கட்சித் தலைவர்.

பிரான்ஸைக் கடந்த சில நாட்கள் அதிர்ச்சியடையச் செய்த நகரப்புறக் கலவரங்களில் சம்பந்தப்பட்ட இளவயதினரது குடும்பங்களுக்கு அரசு வழங்குகின்ற சமூக நல உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகள் மட்டத்தில் வலுத்து வருகிறது.

வலதுசாரிக் குடியரசுக் கட்சியின் (Les Républicains) தலைவர் எரிக் சியோட்டி (Éric Ciotti) குடும்ப உதவிகளை ரத்துச் செய்வதற்கான சட்டம் (loi sur la suppression des allocations familiales) மீது மீள விவாதம் தொடக்கப்படவேண்டும் என்று கேட்டிருக்கிறார். புற நகரங்களில் பாடசாலை செல்லாத மாணவர்களது பெற்றோருக்கு சமூக உதவிக் கொடுப்பனவுகளைக் கட்டுப்படுத்த அல்லது நிறுத்த வகை செய்யும் சட்ட மூலம் ஒன்றின் மீது 2010 ஆம் ஆண்டில் விவாதம் நடத்தப்பட்டிருந்தது. அது ஏற்றுக்கொள்ளப்பட நிலையில் பின்னர் அது 2013 இல் மீண்டும் கைவிடப்பட்டிருந்தது. நொந்தேர் நகரில் பொலீஸ் உத்தியோகத்தரால் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக நாடெங்கும் வெடித்த வன்முறையில் பள்ளிசெல்லும் பதின்ம வயதினையுடைய இளையவர்களே பெருமளவில் சம்பந்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. அதனையடுத்துக் கருத்து வெளியிட்டிருந்த அதிபர் எமானுவல் மக்ரோன், கலவரங்களில் தொடர்புபட்ட இளையோரது பெற்றோர் மீது நிதி உதவி ரீதியிலான தடை உட்படப் பலவித சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகக் கோடிகாட்டியிருந்தார்.

அரசுத் தலைமை இணங்கும் பட்சத்தில் நாடாளுமன்றத்தில் இது தொடர்பான விவாதம் ஒன்றை உடனடியாகத் தொடக்குவதற்கான பிரேரணையைத் தமது கட்சி ஆயத்தமாக வைத்திருப்பதாக எரிக் சியோட்டி தெரிவித்திருக்கிறார்.

அதிபர் மக்ரோன் இன்று வன்செயல்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட நகரசபைகளது முதல்வர்களுடன் எலிஸே மாளிகையில் நடத்திய கலந்துரையாடலின் போதும் குடும்ப நிதி உதவிகளை நிறுத்தும் விடயம் எழுப்பப்பட்டிருந்தது.