திருக்குரான் எரிக்கப்பட்டது குறித்து திருத்தந்தை கண்டனம்.
சுவீடன் நாட்டில் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான் எரிக்கப்பட்டுள்ளது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐக்கிய அரபுக் குடியரசின் Al-Ittihad என்னும் தினஇதழுக்கு வழங்கிய நேர்முகத்தில் இந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை, மனித உடன்பிறந்தநிலை என்ற ஏட்டில் வெளியிடப்பட்டுள்ள மதிப்பீடுகளை ஒவ்வொருவரும் தங்கள் இதயங்களில் தாங்கி செயல்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் விடுத்துள்ளார்.
புனித நூலான திருக்குரானின் பிரதிகளை தீயிட்டுக் கொளுத்திய நடவடிக்கைக் குறித்து தான் கோபம் மற்றும் வெறுப்பு கொள்வதாக அத்தினஇதழின் ஆசிரியர் Hamad Al-Kaabi அவர்களிடம் கூறிய திருத்தந்தை, எந்த ஒரு நூலும் அதனை விசுவசிப்பவர்களுக்கான மதிப்புடன் மதிக்கப்பட்டவேண்டும், மற்றும் பேச்சுச் சுதந்திரம் என்பது மற்றவர்களின் மனதைப் புண்படுத்த பயன்படுத்துவதற்கானது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்மறை மற்றும் பொய்யான செய்திகள், நுகர்வுக்கலாச்சாரம் மீது ஈர்ப்பு, பகைமை, முன்சார்பு எண்ணங்கள், போன்றவைகளில் இளையோர் தங்களை இழக்காமல் இருக்கவேண்டுமெனில் சுதந்திரம், பகுப்பாயும் திறன், பொறுப்புணர்வு போன்றவைகளை வழங்கி நாம் உதவவேண்டும் எனவும் தன் நேர்முகத்தில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐக்கிய அரபு குடியரசின் அரசால் நடத்தப்படும் Al-Itthad அரபு தினஇதழுக்கு திருத்தந்தை வழங்கிய நேர்முகத்தில், குடலிறக்க அறுவைச் சிகிச்சைக்குப்பின் தன் தற்போதைய உடல்நிலை குறித்தும் பகிர்ந்துள்ளார்.