கிளர்ச்சியை ரஷ்யா “பூச்சியைப் போல நசுக்கியிருக்கும்”!

Kumarathasan Karthigesu-பாரிஸ் .

வாக்னர் படைத் தலைவரை “கொல்ல வேண்டாம் என்று நானே புடினைத் தடுத்தேன்” பெலாரஸ் அதிபர் தெரிவிப்பு.

ரஷ்யாவுக்கும் வாக்னர் துணைப்படை க்கும் இடைய ஏற்பட்ட பதற்றத்தைத் தணிப்பதில் முக்கிய பங்காற்றினார் எனத் தெரிவித்திருக்கின்றார் பெலாரஸ் நாட்டின் அதிபர் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ (Alexander Lukashenko). ப்ரிகோஜின் மற்றும் புடின் ஆகியோருடன் நடத்திய தொலைபேசி உரையாடல்களில் தான் கூறிய விடயங்களை அவர் வீடியோ உரை ஒன்றில் வெளியிட்டிருக்கிறார்.

 

மொஸ்கோ நோக்கி முன்னேறி வந்த வாக்னர் கிளர்ச்சிப் படைகளைப் பாதி வழியிலேயே”பூச்சிகளை நசிப்பது போன்று ரஷ்யா அழித்துத் துடைத்துவிடும்” என ப்ரிகோஜினுக்கு எச்சரிக்கை விடுத்தார் என்றும் – அதேசமயம், வாக்னர் படைத் தலைவரைக் கொல்ல வேண்டாம் என்று அதிபர் புடினிடம் உறுதிமொழி பெற்றார் என்ற தகவலையும் – ரெலிகிராம் சனலில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ பதிவில் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்திருக்கிறார்.

“அவரை நாங்கள் கொல்ல முடியும். அது ஒரு பிரச்சனையே இல்லை. முதல் எடுப்பிலேயோ அல்லது இரண்டாவது முறையிலோ அவரைக் கொன்றிருக்க முடியும். ஆனால் அதனைச் செய்ய வேண்டாம் “-இவ்வாறு புடினிடம் பேசிய போது தான் கேட்டுக்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ரஷ்ய அதிபர் புடினுக்கு மிக நெருக்கமான நண்பர் ஆவார். ரஷ்யா அண்மையில் தனது தந்திரோபாய அணு ஆயுதங்கள் சிலவற்றைப் பெலாரஸ் நாட்டுக்கு நகர்த்தி இருந்தது.

கடந்த வார இறுதியில் உலகைப் பரபரப்புக்குள்ளாக்கிய திடீர் ஆயுதக் கிளர்ச்சியைக் கைவிட்டு ரஷ்யாவிலிருந்து வெளியேற இணங்கிய ப்ரிகோஜின், இன்று செவ்வாய்க்கிழமை பெலாரஸ் நாட்டை வந்தடைந்துள்ளார் என்பதை அந்நாட்டின் அதிபர் தனது செய்தியில் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் ப்ரிகோஜின் எங்கே இருக்கிறார் என்பதை சுயாதீனத் தரப்புகள் எதுவும் இன்னமும் உறுதிசெய்யவில்லை.

அதேவேளை, வாக்னர் தலைவர் உண்மையில் எங்கே உள்ளார் என்பது மர்மமாக இருப்பதாக மேற்கு நாட்டுப் பாதுகாப்புச் சேவைகளும் தெரிவிக்கின்றன.

கடைசியாகத் தென்பகுதி நகரம் ஒன்றில் இருந்து அவர் காரில் புறப்பட்டுச் செல்வதையும் அங்கு நின்ற மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவரை வழியனுப்பி வைப்பதையும் காட்டும் படங்கள் வெளியாகி இருந்தன. அதன்பிறகு அவர் எங்கே சென்றார் என்பது உறுதியாகத் தெரியவரவில்லை. புடின் எப்போதும் தனது எதிராளிகளைத் தீர்த்துக் கட்டுவதில் குறியாக இருப்பவர் என்பதால் ப்ரிகோஜினின் உயிருக்கு எந்த வேளையும் ஆபத்து உள்ளது என்று மேற்குலக உளவு நிபுணர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் ரெலிகிராம் சனலில் வெளியாகிய ப்ரிகோஜினின் செய்தி ஒன்றில், மொஸ்கோவை நோக்கித் தாங்கள் மேற்கொண்ட “நீதிக்கான பயணம்” அதிபர் புடினை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நோக்கம் கொண்டதல்ல என்று தெரிவித்திருந்தார்.

இதேவேளை – வாக்னர் நடத்திய ஒரு நாள் கிளர்ச்சி மொஸ்கோவில் கிரெம்ளின் உயர் மட்டங்களில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. மொஸ்கோ ஆயுதங்களையும் பெருமளவு நிதியையும் அள்ளிக் கொடுத்து வளர்த்து உருவாக்கிய துணைப்படை கடைசியில் கிரெம்ளினுக்கு எதிராகத் திரும்பியமை புடினின் இரண்டு தசாப்த கால அதிகாரத்தில் ஏற்பட்ட முக்கியமான பலத்த அடி என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

புடின் நேற்றும் இன்றும் இரு தடவைகள் நாட்டுக்குத் தொலைக்காட்சியில் உரையாற்றியிருக்கிறார். கிளர்ச்சியைத் திட்டமிட்ட சக்திகளது நோக்கம் ரஷ்யாவை இரத்தத்தில் குளிக்க வைப்பதுதான் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இரத்தக் களரியைத் தவிர்ப்பதற்காகப் பின்வாங்க முடிவு செய்த வாக்னர் படைவீரர்களை “தேசபக்தர்கள்” எனப் புகழ்ந்து அவர்களுக்கு நன்றி கூறிய புடின் , விரும்பினால் அவர்கள் ரஷ்ய ராணுவத்தில் இணைந்து கொள்ளலாம். அல்லது பெலாரஸ் நாட்டுக்குச் செல்லலாம் என்று அறிவித்தார். ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளைத் தான் கடைப்பிடிப்பார் என்றும் உறுதி கூறினார். உள்நாட்டுப் போரைத் தடுத்து நிறுத்தியதற்காக அவர் ரஷ்யாவின் பாதுகாப்புச் சேவைகளுக்குப் பாராட்டைத் தெரிவித்தார்.