வரலாற்றுச் சாதனையை தன்வசமாக்கியது திருக்கோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி.
Keshihan Ilamuruganathan- திருகோணமலை
சாரணியத்தில் அதிஉயர்ந்த விருதாகிய ஜனாதிபதி சாரணர் விருதினை “அறுபதாவது திருமலை சாரணர் குழுவாகிய” சண்முகா இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 19 மாணவிகள் ஒரே நேரத்தில் பெற்று வடக்குக் கிழக்கில் தங்களுடைய சாதனையை நிலைநாட்டி உள்ளனர்.
இதுவரை திருக்கோணமலை மாவட்டத்தில் 69 ஜனாதிபதி விருதுகள் பெறப்பட்டுள்ள நிலையில் 28 விருதுகளை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளும், 23 விருதுகளை இ.கி.ச கோணேஸ்வரா இந்து கல்லூரியும், ஏழு விருதுகளை உவர்மலை விவேகானந்தா கல்லூரியும், மூன்று விருதுகளை கிளிவெட்டி மகாவித்தியாலயமும் பெற்றுள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனைக்கு காரணமானவர் குறித்த பாடசாலையின் சாரண ஆசிரியராக செயல்பட்ட திரு. நந்தகுமார் அசோக்குமார் ஆவார். மேலும் அவருடன் இணைந்து ஏனைய ஆசிரியர்களும், பல சாரணர்களும் செயற்பட்டு இந்த சாதனையை உரித்தாக்கியுள்ளனர்.
குறித்த பாடசாலையில் சாரணர்கள், குருளைச் சாரணர்கள், சிங்கிதி சாரணர்கள் என சாரணியத்தில் அனைத்து பிரிவுகளும் காணப்படுகின்றது.
26.05.2023 வெள்ளிக்கிழமையன்று குறித்த மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு மாலை 4.00 மணிக்கு பாடசாலை சம்பந்தர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது, வலய கல்வி பணிப்பாளர், மாவட்ட ஆணையாளர், சாரணர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.