5-வது முறையாக “சாம்பியன்” பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த 20 ஓவர் கிரிக்கெட் லீக் மற்றும் ‘பிளே-ஆப்’ சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. மகுடத்துக்கான இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்க இருந்தது. ஆனால் இரவு முழுவதும் இடைவிடாது பெய்த மழையால் இறுதிப்போட்டி ‘டாஸ்’ கூட போடப்படாத நிலையில் மறுநாளுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் குஜராத்- சென்னை அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் நேற்றிரவு ஆமதாபாத்தில் அரங்கேறியது. இரு அணியிலும் மாற்றமில்லை. ‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் டோனி, மழைக்குரிய அறிகுறி தென்படுவதால் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

இதன்படி சுப்மன் கில்லும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். எச்சரிக்கையுடன் தொடங்கிய இருவருக்கும் அதிர்ஷ்டம் கைகொடுத்தது. கில் 3 ஓட்டங்களில் இருந்த போது வழங்கிய மிக எளிதான பிடி வாய்ப்பை தீபக் சாஹர் கோட்டை விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட கில், தேஷ்பாண்டே மற்றும் தீக்ஷனா ஓவர்களில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி ஓடவிட்டு ரசிகர்களை சந்தோசப்படுத்தினர் .

மறுமுனையில் வேகம் காட்டிய சஹா 21 ஓட்டங்களில் இருந்தபோது பந்து வீசிய தீபக் சாஹருக்கு பிடி செய்ய வாய்ப்பு கிட்டியது. இந்த முறையும் பிடிக்க தவறினார். அத்துடன் சஹா 27 ஓட்டங்களில் இரு முறை ரன்-அவுட் வாய்ப்பில் இருந்து தப்பித்தார். ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 62 ஓட்டங்கள் திரட்டி வலுவான அடித்தளம் அமைத்தனர். ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் பவர்-பிளேயில் எடுக்கப்பட்ட சிறந்த ஸ்கோர் இதுவாகும். ஸ்கோர் 67 ஆக உயர்ந்த போது சுப்மன் கில் 39 ஓட்டங்களில் (20 பந்து, 7 பவுண்டரி) ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் விக்கெட் கீப்பர் டோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

அடுத்து சஹாவுடன், தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். தொடக்கத்தில் சற்று தடுமாறிய சுதர்சன் முதல் 12 பந்தில் 10 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். அதே சமயம் ஸ்கோரை சீரான வேகத்தில் நகர்த்திய சஹா 54 ஓட்டங்களில் (39 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமானார் ஆனார். 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா களம் புகுந்தார். சஹாவின் வெளியேற்றத்துக்கு பிறகு பொறுப்பை கையில் எடுத்தக் கொண்ட சாய் சுதர்சன் சென்னை பந்து வீச்சை சிதறடித்தார். தீக்ஷனாவின் சுழலில் இரு சிக்சர் பறக்க விட்ட அவர் தேஷ்பாண்டேவின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் தெறிக்கவிட்டு பிரமிக்க வைத்தார். அத்துடன் 33 பந்துகளில் தனது 3-வது அரைசதத்தையும் பூர்த்தி செய்தார். ‘சென்னை சூப்பர் கிங்சை பதம் பார்க்கும் சென்னை வீரர்’ என்று வர்ணிக்கும் அளவுக்கு சுதர்சன் கடைசி கட்டத்தில் ருத்ரதாண்டவமாடினார். கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்சர் விளாசிய சுதர்சன் சதம் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் 96 ஓட்டங்களில் (47 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) பதிரானாவின் யார்க்கரில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த ரஷித்கான் (0) தூக்கியடித்து பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுக்கு 214 ஓட்டங்கள் குவித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் இறுதிப்போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் ஐதராபாத் அணி, பெங்களூருவுக்கு எதிராக 7 விக்கெட்டுக்கு 208 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. ஹர்திக் பாண்ட்யா 21 ஓட்டங்களுடன் (12 பந்து, 2 சிக்சர்) களத்தில் இருந்தார்.

பின்னர் 215 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி சென்னை அணி துடுப்பெடுத்தாடியது . 0.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.

சிறிது நேரத்தில் மழை ஓய்ந்தாலும், அவுட்பீல்டு சகதியுடன் காணப்பட்டதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து 15 ஓவர்களில் 171 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்று சென்னை அணிக்கு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
இதை நோக்கி ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட்டும் (26 ஓட்டங்கள் ), கான்வேவும் (47 ஓட்டங்கள் , 4 பவுண்டரி, 2 சிக்சர்) அதிரடியான தொடக்கம் தந்தனர். அடுத்து வந்த ரஹானே (27 ஓட்டங்கள் ), மாற்று வீரர் அம்பத்தி ராயுடு (19 ஓட்டங்கள் ) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க, போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது. கேப்டன் டோனி (0) ஏமாற்றம் அளித்தார். கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார். முதல் 4 பந்தில் 3 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால் நெருக்கடி அதிகரித்தது. கடைசி 2 பந்தில் 10 ஓட்டங்கள் தேவையாக இருந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார்.

சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 171 ஓட்டங்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்ததோடு கோப்பையை உச்சிமுகர்ந்தது. ஷிவம் துபே 32 ஓட்டங்கள் , ஜடேஜா 15 ஓட்டங்கள் களத்தில் இருந்தனர். ஐ.பி.எல். கோப்பையை சென்னை அணி வெல்வது இது 5-வது முறையாகும். இதன் மூலம் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்சின் சாதனையை சமன் செய்தது. டோனி, சுதர்சன் சாதனை * குஜராத் அணி வீரர் சுப்மன் கில் இறுதிப்போட்டியில் 39 ஓட்டங்கள் ஆட்டமிழந்தார். இதையும் சேர்த்து அவர் நடப்பு தொடரில் 3 சதம், 4 அரைசதம் உள்பட 890 ஓட்டங்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பி கவுரவத்தை தட்டிச் சென்றார். அத்துடன் ஒரு சீசனில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறினார். பெங்களூரு வீரர் விராட் கோலி 973 ஓட்டங்களுடன் (2016-ம் ஆண்டு) முதலிடத்தில் உள்ளார். * சுப்மன் கில்லை, சென்னை கேப்டனும் விக்கெட் கீப்பருமான டோனி ஸ்டம்பிங் செய்தார். ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங்கில் டோனி வீழ்த்திய 300-வது ஆட்டமிழப்பு இதுவாகும். இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் ஆவார். * சாய் சுதர்சன் எடுத்த 96 ,ஓட்டங்கள் ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ஒரு வீரரின் 3-வது அதிகபட்சமாக பதிவானது. அத்துடன் இறுதிசுற்றில் அரைசதம் அடித்த 2-வது குறைந்த வயது வீரர் என்ற சிறப்பையும் 21 வயதான சுதர்சன் பெற்றார்.