பிளாஸ்டிக் கழிவை நேரம் கணித்த வெடி குண்டுடன் ஒப்பிட்டு மக்ரோன் எச்சரிக்கை.
Kumarathasan Karthigesu-பாரிஸ்
மாசுகளுக்கு முடிவுகட்ட உலகளாவிய உடன்பாடு பாரிஸ் மாநாட்டில் முயற்சி.
பிளாஸ்டிக் கழிவுகளை முற்றாக ஒழிப்பதற்குச் சர்வதேச ரீதியான உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கான முயற்சிகள் பாரிஸில் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக 175 நாடுகளின் பிரதிநிதிகள் நேற்றுத் திங்கட்கிழமை ஆரம்பமாகிய மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
பூமிப் பந்து எங்கும் நிரம்பி வழிகின்ற பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படுகின்ற மாசுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குச் சட்ட ரீதியாகப் பாதுகாக்கப்படக் கூடிய சர்வதேச உடன்படிக்கை ஒன்றை எதிர்காலத்தில் உருவாக்குவதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதே இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும்.
இவ்வாறு பிளாஸ்டிக் தொடர்பான ஐ. நா. உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவது என்று உறுப்பு நாடுகள் கடந்த ஆண்டு பெப்ரவரியில் கொள்கையளவில் இணங்கியிருந்தன. அதன் தொடர்ச்சியாகவே பாரிஸ் மாநாடு நடத்தப்படுகிறது.
பாரிஸில் உள்ள யுனெஸ்கோ(UNESCO) தலைமையகத்தில் நடைபெறுகின்ற இந்த மாநாட்டின் தொடக்க நாளான நேற்று அதிபர் மக்ரோன் மாநாட்டின் பிரதிநிதிகளுக்குத் தொலைக்காட்சி வழியாகத் தோன்றி உரையாற்றினார்.
பிளாஸ்டிக் கழிவுகளை “நேரக் கணிப்புக் குண்டு”(time bomb) எனக் குறிப்பிட்ட அவர், நாம் எதுவும் செய்யாவிட்டால் பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி 2060 ஆம் ஆண்டளவில் மும்மடங்காகிவிடும் என்று எச்சரித்தார்.
வளர்ந்த நாடுகள் பெருமளவில் பிளாஸ்டிக்கை உற்பத்திசெய்து அந்தப் பொருள்களை மீள் சுழற்சி செய்கின்ற வசதிகள் அற்ற வளர்முக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
அங்கு கருத்து வெளியிட்ட பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் கத்தரின் கொலோனா (Catherine Colonna), “நாங்கள் விரைந்து செயற்படத் தவறுவோமாயின் 2050 ஆம் ஆண்டில் சமுத்திரங்களில் மீன்களை விடப் பிளாஸ்டிக் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்” – என்று எச்சரித்தார்.
வருடாந்தப் பிளாஸ்டிக் உற்பத்தி கடந்த இருபது ஆண்டுகளில் 460 மில்லியன் தொன்களாக அதிகரித்துள்ளது. அதில் முப்பது சதவீதத்துக்கும் குறைவான பிளாஸ்டிக் வகைகளே மறு சுழற்சி செய்யப்படுகின்றன. எஞ்சியவை கழிவுகளோடு சேர்ந்து தரையிலும் கடலிலும் கலக்கின்றன.