பிரெஞ்சுப் பெண் இயக்குநரது படம் ‘தங்கப் பனை’ விருதை வென்றது!

Kumarathasan Karthigesu-பாரிஸ்.

ஓய்வூதிய மக்கள் எழுச்சியை மறுக்கும் அரசைக் கண்டித்து கேன் விழாவில் அவர் உரை

பிரான்ஸின் கேன் நகரில் நடைபெற்று வந்த சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நாள் இன்றாகும். இன்றைய நாளின் முடிவில் திரைத் துறை சார் விருதுகளை வென்ற திரைப்படங்கள் மற்றும் இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் போன்றோரது விவரங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

பிரான்ஸின் பெண் இயக்குநர் ஜுஸ்டின் ரியட் (Justine Triet) இயக்கிய”Anatomie d’une chute” (Anatomy of a fall) திரைப்படம் அதி உயர் விருதாகிய தங்கப் பனையை (La Palme d’Or) வென்றுள்ளது. இதன் மூலம் பெருமைக்குரிய சினிமா விருதுகளை வழங்குகின்ற கேன் திரைப்பட விழாவில் (Cannes Film Festival) ‘தங்கப் பனை’ விருதை வெல்லுகின்ற மூன்றாவது பெண் இயக்குநர் என்ற பெருமையை அவர் பெறுகின்றார்.

கேன் சினிமா விருது விழா வரிசையில் இம்முறை நடந்த 76 ஆவது திரைப்பட விழாவில் ஏழு பெண் இயக்குநர்கள் உட்பட 21 இயக்குநர்களது படங்கள் தங்கப் பனை விருதுக்கான போட்டியில் பங்கேற்றிருந்தன.

சான்ட்ரா என்ற பிரபல ஜேர்மனியப் பெண் எழுத்தாளர் தனது கணவர் சாமுவேல் மற்றும் பார்வை இழந்த அவர்களது மகனான டானியல் ஆகியோருடன் பிரான்ஸின் அல்ப்ஸ் மலைச் சாரலில் ஒதுக்குப் புறமான ஒரு வீட்டில் வசிக்கிறார். ஒரு நாள் அவரது கணவரான சாமுவேல் மர்மமான முறையில் வீழ்ந்து உயிரிழக்கின்றார்.

அவரது மரணம் தற்கொலையா அல்லது திட்டமிட்ட நாடகமா என்ற குழப்பத்தின் நடுவே சாண்ட்ரா கைதுசெய்யப்படுகிறார். அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்படுகிறது.

அல்ப்ஸ் நீதிமன்றம் ஒன்றில் அவர் தன்னை ஓர் அப்பாவி என நிறுவுவதற்கு எடுக்கும் பிரயத்தனங்களே “Anatomie d’une chute” திரைப்படத்தின் மூலக் கதை ஆகும்.

பல மில்லியன் பேரால் பார்வையிடப்பட்ட இன்றைய இறுதி நாள் விழாவில் தங்கப் பனை விருதைப் பெற்றுக் கொண்ட பின்னர் உரையாற்றிய இயக்குநர் ஜுஸ்டின் ரியட் (Justine Triet), ஓய்வூதியச் சீர்திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்ற மக்களது எழுச்சியை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று குறிப்பிட்டார். அரசு அந்த எழுச்சியை அதிர்ச்சியளிக்கும் வகையில் மறுத்து நிராகரித்து வருவதாகக் குற்றம் சுமத்தினார். நவதாராளமய(neoliberal) அரசாங்கத்தின் அணுகு முறைகளைக் கடுமையாகச் சாடும் விதமாக அவரது உரை அமைந்திருந்தது.

தங்கப் பனை விருதுக்கு அடுத்த நிலையில் இங்கிலாந்து இயக்குநர் ஜொனதான் கிளேசர்(Jonathan Glazer) இயக்கிய “The Zone of Interest” என்ற திரைப்படம் இரண்டாவது பெரிய விருதை வென்றுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருதை ஜப்பானிய இயக்குநர் விம் வெண்டர்ஸ்(Wim Wenders) இயக்கிய “Perfect Days” என்ற படத்தின் பிரதான பாத்திரத்தில் நடித்த கோஜி யாகுஷோ(Koji Yakusho)  வென்றார். துருக்கி இயக்குநர் நூரி பில்ஜ் சிலான்(Nuri Bilge Ceylan) இயக்கிய “Dry Herbs” என்ற படத்தின் நடிகை மெர்வ் டிஸ்டார் (Merve Dizdar) சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார்.

????சிறந்த குறும் படத்திற்கான தங்கப் பனை விருதை ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஃப்ளோரா அனா புடா(Flóra Ana Buda) என்பவர் இயக்கிய “27” என்ற படம் வென்றுள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">