நாட்டில் நால்வரில் ஒருவருக்கு உயர் குருதி அழுத்தம்!
Kumarathasan Karthigesu
எச்சரிக்கின்றது சுகாதாரத்துறை.
பிரான்ஸில் 17 மில்லியன் பேர்-அல்லது நால்வரில் ஒருவர் – உயர் குருதி அழுத்தத்தால் (L’hypertension) பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் அதைத் தெரிந்துகொள்ளாமலே நோய்களுக்கு ஆளாகின்றனர்.
நாட்டின் பொதுச் சுகாதாரத் துறை(Santé Publique France) அதன் மதிப்பீடு ஒன்றில் இந்த விவரங்களை வெளியிட்டிருக்கிறது. மே மாதம் 17 ஆம் திகதி உலக உயர் குருதி அழுத்த நாள் ஆகும்.
வளர்ந்தவர்களில் சுமார் ஆறு மில்லியன் பேர் தங்களுக்குக் குருதி அழுத்தம் இருப்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர்.
நான்கு பேரில் ஒருவரே மருத்துவரை அணுகித் தங்களுக்கு குருதி அழுத்தம் இருப்பதை அறிந்து கொள்கின்றனர். மருத்துவரை அணுகிச் சரியான வழிமுறைகளைப் பின் பற்றினால் மட்டுமே அதனைக் குறைக்க முடியும். இல்லையேல் உடல் நலத்துக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்-என்று சுகாதாரத் துறை எச்சரிக்கை செய்துள்ளது.
உயர் குருதி அழுத்தம் உள்ளவர்கள் மூளை அல்லது இதய வெடிப்பு அல்லது மாரடைப்புப் போன்ற பெரும் உயிர் ஆபத்துக்களைச் சந்திக்கக் கூடும்.
பலர் தமக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் எல்லோரிடத்திலும் அது அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை. முதலாவது மாரடைப்பு ஏற்படும்வரை அது அவர்களுக்கு வெளித்தெரிவதில்லை.
சில சந்தர்ப்பங்களில் மட்டுமே , அது தலைவலி, கவனம் செலுத்துவதில் சிரமம், தலைச்சுற்றல், மூச்சுத் திணறல், காதுகளில் இரைச்சல் போன்ற குறிப்பிட்ட சில அறிகுறிகளுடன் தொடர்புபடுகிறது.
-இவ்வாறு பாரிஸ் பொம்பிடு மருத்துவ மனையின் இருதயச் சிகிச்சைத் துறையின் முன்னாள் பணிப்பாளர் பியேர் பிரான்ஷூவா(Pierre-François) ஆலோசனை கூறுகிறார்.
” நரம்புப் பதற்றம், மன அழுத்தம் மற்றும் உயர் குருதி அழுத்தம் ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு கிடையாது. இதயத் துடிப்புடன் இவற்றுக்குச் சம்மந்தம் இல்லை. இது இரத்தத்தின் அழுத்தம் தொடர்புடையுது” – என்றும் அவர் கூறுகிறார்.
குருதி அழுத்தம் குணப்படுத்த முடியாதது. அதற்கு 120 க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் உள்ளன. ஆனால் இதில் உள்ள பாதகம் என்னவெனில் மருந்து உட்கொள்வதை நிறுத்தினால் மீண்டும் அழுத்தம் அதிகரிக்கும். சில சமயங்களில் ஒரே சமயத்தில் பல மாத்திரைகளை உள்ளெடுக்கவேண்டி வரலாம். அவை கடுமையான பக்க விளைவுகளை உண்டாக்கலாம் – என்றும் மருத்துவ நிபுணர் பியேர் பிரான்ஷூவா எச்சரிக்கிறார்.