“பிரிட்டிஷ் பிரதமரின் மாமியார் என்பதை நம்ப மறுக்கிறார்கள்”
Kumarathasan Karthigesu
எழுத்தாளர் சுதா மூர்த்திக்கு இப்படி ஒரு சிக்கல்..
ஒரு தடவை நான் அங்கு போகும் போது குடிவரவு அதிகாரி ஒருவர் லண்டனில் எனது வதிவிட முகவரியைக் கேட்டார். அப்போது எனது மூத்த சகோதரியும் உடன் இருந்தார். “நம்பர் 10, டவுணிங் வீதி” (10, Downing Street) என்பதையே எழுதவேண்டும் என்று நினைத்தேன். எனது மூத்த மகனும் லண்டனில் தான் வசிக்கிறார். ஆனால் அவரது வதிவிட முகவரி முழுமையாக எனக்குத் தெரியாது. கடைசியில் டவுணிங் வீதி முகவரியையே எழுதினேன். அந்த அதிகாரி வியப்புடன் என்னைப் பார்த்துவிட்டு “என்ன பகிடியா விடுகிறாய்?” என்று கேட்டார்.
சுதா மூர்த்தி இந்தியாவின் பிரபல இன்ஃபோசிஸ் தொழில்நுட்பக் கம்பனியின் (Infosys Technologies) நிறுவுநரும் தொழிலதிபருமாகிய என். கே நாராயண் மூர்த்தியின் (Narayan Murthy) மனைவி ஆவார். இவர்களது ஒரே புதல்வியான அக்க்ஷதா மூர்த்தியே (Akshata Murthy) இங்கிலாந்தின் முதலாவது இந்திய வம்சாவளிப் பிரதமராகிய ரிஷி சுனாக்கின் துணைவியார்.
சுதா மூர்த்தி இந்தியாவின் பிரபல கோடீஸ்வரர்களில் ஒருவரது மனைவி, இன்ஃபோசிஸ் தொழில்நுட்பக் கம்பனியின் தலைவி என்று பல தகுதிகளைக் கொண்டிருந்த போதிலும் மிகவும் எளிமையான வாழ்க்கையைத் தொடர்பவர் என்று அறியப்பட்டவர். எளிமையான தனது தோற்றம் இங்கிலாந்துப் பிரதமரது மாமியாரா இவர் என்ற சந்தேகத்தை அடிக்கடிப் பலரிடம் எழுப்புகிறது என்று பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொடர் ஒன்றில் அவரே கூறியிருக்கிறார்.
தன்னுடைய அண்மைக்கால இங்கிலாந்துப் பயணங்களின் போது விமான நிலையங்களில் குடிவரவு-குடியகல்வு அதிகாரிகள் தனது தங்குமிடம் இங்கிலாந்துப் பிரதமரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான நம்பர் 10, டவுணிங் வீதி என்பதை நம்ப மறுத்த சம்பவங்களைக் குறிப்பிட்டு விவரித்திருக்கிறார்.
தொழிலதிபர், கல்வியாளர், எழுத்தாளர் பரோபகாரர் எனப் பல முகங்களில் அறியப்பட்டவரான சுதா மூர்த்தி, இந்தியாவின் உயர்ந்த சிவிலியன் விருதுகளில் ஒன்றாகிய பத்மபூஷன் விருதை அண்மையில் பெற்றிருந்தார்.