“கோமாளி’ அரசியல்!
ஆர்.சனத்
காமன் பொட்டலில் ரதி – மதன் ஆட்டம் இடம்பெறுகையில், பார்வையாளர்களை மகிழ்விப்பதற்கும், அவர்கள் சோர்வடையாமல் இருப்பதற்கும் ‘கோமாளி’ வேடம் தரித்தவர் குத்துக்கரணம் அடித்தும், தொப்பை வயிற்றை குலுக்கியும், அங்கும் இங்குமாக தாவியும் மேலும் சில வித்தைகளை அரங்கேற்றியும் அரங்கை அமர்களப்படுத்துவார்.
கோமாளி ஒரு இடத்தில் நின்று ஆடாது, ரதி பக்கம் செல்வார், பின்னர் மதன் இருக்கும் பக்கம் வருவார். பார்வையாளர் அமர்ந்திருக்கும் பகுதிகளுக்கும் செல்வார். தனக்கு என்ன எண்ணம் வருகின்றதோ அதை அவர் செய்வார். கோமாளி என்பதால் மக்கள் அது குறித்து அலட்டிக்கொள்ளமாட்டார்கள்.
இலங்கை அரசியலிலும் இப்படியொரு கோமாளி நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். அவர் வேடம் தரிக்க வேண்டியதில்லை. கோமாளி பாத்திரத்துக்குரிய தோற்றத்தை இயல்பாகவே கொண்டுள்ளார்.
காமன் கூத்து கோமாளிபோல், அரசியல் களத்தில் இந்த கோமாளிக்கும் ஒரு இடத்தில் இருக்க முடியாது. அந்த பக்கம், இந்த பக்கம் என ‘குத்துக்கரணம்’ அடித்து – ‘தாவல்துறை’ என ஒரு அமைச்சு வந்தால் அதற்கு தானே தகுதியானவர் என்பதை நிரூபித்துவிட்டார்.
கோமாளிபோல் நடந்துகொண்டால்கூட பரவாயில்லை. அது அவரின் பண்பு. தனிப்பட்ட உரிமை. அதில் நாம் தலையிடுவதுகூட உரிமைமீறலாகவே அமையும்.
ஆனால் கோமாளி வேடம் தரிப்பதும், தாவுவதும் ‘என் தொப்புள்கொடி உறவுகளான மக்களுக்காகவே’ என அவர் வழங்கும் விளக்கம்தான் விமர்சனத்துக்குரிய விடயமாகும். தனது தனிப்பட்ட தேவைகளை ஈடேற்றிக்கொள்ள ‘மக்களை’ அவர் பணயம் வைப்பதால்தான், மக்கள் பக்கம் நின்று விமர்சனங்களை தொடுக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
‘மக்கள் பிரதிநிதியென’ கூறிக்கொண்டு தனிஒருவர் அரங்கேற்றும் ‘கூத்து’ அரசியலால், அவர் சார்ந்த சமூகம் தொடர்பிலும் தவறான அபிப்ராயம் எழக்கூடும். அவர் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதி என்பதாலும், அவரேயே மீண்டும், மீண்டும் தெரிவுசெய்து சபைக்கு அனுப்புவதாலும் எழும் இந்த சந்தேகம்கூட நியாயமான ஒன்றாகவே இருக்கின்றது.
அரசியலில் ‘ஒரு கட்சியில்’தான் நீடித்து நிலைக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. ஆனால் ‘கொள்கை’ என்பதே முக்கியம். அந்த கொள்கையை முன்னிறுத்தி அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதை நியாயப்படுத்தலாம்.
ஒரு கட்சியில் தேர்தலில் போட்டியிட்டால், அந்த தவணைக்குரிய பதவிகாலம் முடிவடையும்வரையிலாவது அந்த கட்சியில் இருந்து, கொள்கை முரண்பாடு உள்ளதெனில் அதனை சுட்டிக்காட்டி மக்கள் ஆணையுடன் மாறுவதை நியாயப்படுத்தலாம். ஆனால் இவரின் கூத்து அரசியல் ஜனநாயகத்தை நேசிப்பவர்களை கொதிப்படைய வைக்கின்றது.
அரசியலில் அலகு குத்தி, காவடி தூக்கி ‘பக்தி’ அரசியலை செய்வதைவிட ‘கொள்கை’ அரசியலே முக்கியம். அதனை வலியுறுத்தி கம்பு சுத்துங்கள்.
அதேபோல இப்படியான விமர்சனங்களை முன்வைக்கும் என்னை போன்றவர்களை ‘போட்டுக்கொடுக்கும்’ சொம்பு தூக்கிகளும், முட்டு போஸ்களுக்கும், உங்களையும் சேர்த்துதான் அவர் அவதானப்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன்.
ஆர்.சனத்