சிறிலங்கா முப்படை வீரர்கள் ஏழு பேர் பிரான்ஸில் தலைமறைவு?
Kumarathasan Karthigesu
சர்வதேச விளையாட்டு விழாவுக்கு வந்தவர்கள் இடைநடுவில் தப்பினர்.
சிறிலங்கா முப்படை வீரர்கள் ஏழு பேர் பிரான்ஸில் தலைமறைவாகியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸில் நடைபெற்ற சர்வதேச முப்படை விளையாட்டு வீரர்களுக்கான மூன்று விளையாட்டுப் போட்டிகளில் (2023 World Military Triathlon Championship) பங்குபற்றுவதற்காக வந்திருந்த சிறிலங்கா படை அணியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு இடைநடுவில் காணாமற்போயுள்ளனர் என்று பாதுகாப்புத் தரப்புகளை ஆதாரம் காட்டிக் கொழும்பில் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நீய்ச்சல் – சைக்கிள் ஓட்டம் – நீண்ட மரதன் ஓட்டம் ஆகிய முப்போட்டிகளில் சர்வதேச இராணுவ வீரர்களிடையே சம்பியன்களைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்படுகின்ற “ட்ரியாத்லோன்” (Triathlon) விளையாட்டு விழா பிரான்ஸின் தென் மேற்கே Nouvelle-Aquitaine பிராந்தியத்தில் Brive-la-Gaillarde என்ற நகரில் கடந்த 7 ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெற்றன. சிறிலங்கா உட்பட 22 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
போட்டிகளில் பங்கேற்பதற்காக ஐந்து ஆண் வீரர்கள் ஐந்து பெண் வீராங்கனைகள் மற்றும் மூன்று உயரதிகாரிகள் அடங்கிய முப்படை அணி கொழும்பில் இருந்து கடந்த 4 ஆம் திகதி பிரான்ஸுக்குச் சென்றிருந்தது என்றும் –
அவர்களில் ராணுவத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், கடற்படையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் விமானப் படையைச் சேர்ந்த இரண்டு அலுவலர்கள் ஆகிய வீரர்கள், வீராங்கனைகள் அடங்கிய ஏழு பேரே அவர்கள் தங்கியிருந்த இடத்தைவிட்டு வெளியேறித் தலைமறைவாகி விட்டனர் என்று கூறப்படுகிறது.
அவர்களது கடவுச் சீட்டுக்களை அணிக்குப் பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் தன்வசம் வைத்திருந்தார் என்றும் – அந்த அதிகாரி உணவு அருந்தச் சென்ற சமயத்தில் அவரது வசம் வைத்திருந்த தங்களது கடவுச் சீட்டுக்களைக் களவாக எடுத்துக் கொண்டே ஏழு பேரும் தப்பிச் சென்றுள்ளனர் என்றும் – கொழும்பு சிங்கள மொழிச் செய்திச் சேவை ஒன்று தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான தகவல்கள் எதனையும் பிரான்ஸின் அதிகாரிகள் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.
பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளில் நடைபெறுகின்ற இது போன்ற விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்ச்சிகளில் பங்குபற்ற வருகின்ற இலங்கைப் பிரஜைகள் இவ்வாறு தலைமறைவாகிப் பின்னர் தஞ்சம் கோருகின்ற பல சம்பவங்கள் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளன.