மணிப்பூர் வன்முறை! 54 பேர் உயிரிழப்பு.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக குக்கி, மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது. இந்த கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன. மணிப்பூரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இணைய சேவை முடக்கப்பட்டு, கலவரக்காரர்களை சுட மணிப்பூர் ஆளுநர் அனுமதி வழங்கியிருந்தார். கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை, இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், மணிப்பூரில் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. பின்னர் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு நிலைமை கட்டுக்குள் வந்ததாக நேற்று இந்திய ராணுவம் தகவல் தெரிவித்திருந்தது. அதுமட்டுமில்லாமல், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், அரசமைப்பு சட்டப்பிரிவு 355-ஐ மத்திய அரசு அமல்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், மணிப்பூரில் நடந்த மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 13,000 பொதுமக்கள் மீட்கப்பட்டு தற்போது பல்வேறு தற்காலிக தங்கும் இடங்களில் தங்கியுள்ளனர் என்று பாதுகாப்பு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இம்பால் நகரம் மற்றும் பிற இடங்களில் இன்று சந்தைகள் மற்றும் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.