சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டன் வருகிறார்
பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி அங்கு பயணமாகியுள்ளார்.
ஜனாதிபதியுடன் மேலும் 8 பேர் நாட்டிலிருந்து பயணித்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டார்.
சுமார் 70 ஆண்டுக்காலம் ஐக்கிய இராச்சியத்தின் அரியணையில் இருந்த 2ஆம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு செப்டெம்பர் 8ஆம் திகதி காலமானார்.
அவரது மறைவின் பின்னர் இளவரசர் 3ஆவது சார்ள்ஸ் முடிக்குரிய மன்னராக அறிவிக்கப்பட்டார்.
இதன் பிரகாரம், 3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை எதிர்வரும் 6ஆம் திகதி நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
முடிசூட்டு விழாவின் பின்னர், ஐக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் மன்னராக 3ஆவது சார்ள்ஸ் மற்றும் ராணியாக அவரது மனைவி கமிலாவும் திகழவுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் பிரித்தானியா செல்லவுள்ள நிலையில் பக்க நிகழ்வுகள் பலவற்றில் கலந்துகொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் உட்பட நிகழ்வில் கலந்துகொள்ளும் பிற நாட்டு தலைவர்களையும் சந்தித்து, இதன்போது ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.