வடக்கு – கிழக்கு தழுவிய கதவடைப்பு போராட்டத்துக்கு பெரும் ஆதரவு.

தமிழ் தேசிய சக்திகளின் ஒருங்கிணைப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள வடக்கு – கிழக்கு தழுவிய கதவடைப்பு போராட்டத்துக்கு தமது பூரண ஆதரவையும் ஆசியையும் வெளிப்படுத்துவதாக ஆதீனங்களும், இந்து அமைப்புக்களும் தெரிவித்துள்ளன.

திருகோணமலை தென்கயிலை ஆதீனத்தின் தவத்திரு அகத்தியர் மற்றும் யாழ்ப்பாணம் மெய்கண்டார் ஆதீனத்தின் தவத்திரு உமாபதிசிவம் ஆகியோர் கூட்டாக இவ்வாறு தெரிவித்துள்ளனர்.அதேநேரம் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு தொடர்ந்து அரசு செவி சாய்க்காத நிலையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் ஏகோபித்த குரலைப் பிரதிபலிக்கும் வகையில் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாடாளுமன்றத்தை புறக்கணிக்குமாறும் கேட்டு நிற்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட ஆயர்கள், யாழ்ப்பாணம் தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் மற்றும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு என்பன தெரிவித்துள்ளன. அரசின் அநீதியான செயற்பாடுகளை எதிர்த்து சாத்வீக ரீதியில் அரசுக்கும், உலகுக்கும் எமது உணர்வை துல்லியமாக வெளிப்படுத்துவதற்கு கதவடைப்பு மிகப் பெரிய ஆயுதமாகக் காணப்படுகிறது என இந்து சமயப் பேரவையின் தலைவர் ஈசான சிவ சக்திகிரீவன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு சிவில் சமூகம் மற்றும் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஆதரவு திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூகங்களும், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனமும் வடக்கு கிழக்கு நிர்வாக முடக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை முற்றாக எதிர்க்கின்றோம். பல ஆண்டுகளாக தமிழர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடை சட்டம் திணிக்கப்பட்டிருந்தது.

அண்மைக்காலமாக முஸ்லிம் சகோதரர்கள் மீதும் திணிக்கப்பட்டிருந்தது.சிங்கள மக்களும் இந்த சட்டத்தை எதிர்த்துள்ளனர். ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் போராட்டங்களை ஒடுக்க இப்படியான கருவிகளை பயன்படுத்துகின்றனர்.எனவே, நாளை நடைபெறும் நிர்வாக முடக்கத்திற்கு நாம் ஒத்துழைப்பு வழங்குகின்றோம் என்று திருகோணமலை சிவில் சமூகங்களின் கூட்டமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் திருநாவுக்கரசு கோபகன் தெரிவித்துள்ளார்.