ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்.
வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது.
இன்று மதியம் ஒரு மணியளவில் குறித்த போராட்டம் நடைபெற்றது.குறித்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மண்திறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, வெடுக்குநாரி மலை கச்சதீவு நெடுந்தீவு எங்கள் சொத்து, காவிகளின் அட்டகாசத்துக்கு முடிவில்லையா, இராணுவமே வெளியேறு கடற்படையே வெளியேறு, எமது நிலம் எமக்கு வேண்டும், தொல்பொருட் திணைக்களமே வெளியேறு போன்ற கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டது.
அதேவேளை வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பிராந்திய மனிதஉரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆலயத்தின் நிர்வாகத்தினர்.
எமது ஆலயத்தின் விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை மூலம் பௌத்த ஆக்கிரமிப்பின் வெளிப்பாட்டை அனைவரும் உணர்ந்துகொள்ள முடியும். இந்த துன்பியல் சம்பவம் எமக்கு மிகுந்த வேதனை அளிப்பதுடன் இவ்வாறான செயலை செய்தவர்களுக்கு எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆலயத்திற்குள் செல்வதற்கு தொல்லியல் திணைக்களத்தால் எமக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த திணைக்களத்தின் வாகனங்களே அங்கு தொடர்ச்சியாக சென்றுவந்தது. எனவே இந்தச்சம்பவத்தின் பின்னணி தொடர்பாக தொல்லியல் திணைக்களத்தின் மீதே நாம் சந்தேகம் கொள்கின்றோம். மனிதஉரிமை ஆணைக்குழுவிலும் அவர்களுக்கு எதிராகவே எமது முறைப்பாட்டை பதிவு செய்திருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளனர்.