மன்னர் சார்ள்ஸின் பாரிஸ் விஜயத்துக்கு இடையூறு நேரலாம்.

Kumarathasan Karthigesu

பயணங்களை குறிவைத்து மறியல்கள் நடத்த திட்டம்?

பிரிட்டிஷ் மன்னர் மூன்றாவது சார்ள்ஸ் அடுத்த வாரம் தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக துணைவியார் கமீலா சகிதம் பாரிஸ் வருகின்றார். ஓய்வூதியத் திருத்தச் சட்டத்தினால் நாட்டில் உருவாகியுள்ள பெரும் கொந்தளிப்புக் காரணமாக அவரைச் சிறப்புற வரவேற்க முடியாத நிலையும் அவருக்குப் பாதுகாப்பளிப்பதில் சிக்கல்களும் ஏற்பட்டிருக்கின்றன.

பிரான்ஸின் ஓய்வூதியத் திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்கள் உலகின் அதி முக்கிய பிரமுகர் ஒருவரது பாரிஸ் வருகையைத் தங்களது போராட்டத்தின் மீது கவனத்தைத் திருப்பும் நோக்கில் குழப்பக் கூடும் என்று அஞ்சப்படுவதால் பிரிட்டிஷ் மன்னரது பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படவுள்ளன.

குப்பைகள் அகற்றப்படாமல் தொன் கணக்கில் மலைபோல் குவிந்து கிடக்கும் பாரிஸ் தெருக்களிலேயே மன்னர் பயணம் செய்ய வேண்டி இருக்கும் என்று செய்தி ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. வீதி மறியல்கள் பேரணிகள் அவரது பயணத்துக்குத் தடைகளை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த செப்டம்பரில் தனது தாயாரது மறைவை அடுத்து மன்னராக முடி சூடிய இளவரசர் சார்ள்ஸ், அதன் பிறகு தனது முதலாவது வெளி நாட்டுப் பயணமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் வருகிறார். மூன்று நாட்கள் இங்கு தங்கும் அவர் பாரிஸிலும் போர்தோ (Bordeaux) நகரிலும் அரச நிகழ்வுகளில் கலந்து கொள்வார். பின்னர் இங்கிருந்து ஜேர்மனி செல்கிறார்.

பாரிஸில் வெற்றி வளைவு (Arc de Triomphe) மாவீரர் நினைவிடத்தில்மன்னரும் ராணியும் அதிபர் மக்ரோனுடன் இணைந்து  மலரஞ்சலி செலுத்துவர். அதன் பின்னர் மன்னர் செனற் சபையில் உரையாற்றுவார். அதிபர் மக்ரோன் வேர்சாய் அரண்மனையில் (Palace of Versailles) அளிக்கவுள்ள விசேட இரவு விருந்துபசாரத்தில் அரச தம்பதியர் கலந்துகொள்கின்றனர். பாரிஸில் இருந்து செவ்வாய்க்கிழமை அவர்  நாட்டின் தென் மேற்கு நகரமாகிய போர்தோவுக்குச் (Bordeaux) செல்லவுள்ளார். அங்கு பிரபல பிரெஞ்சு வைன் தோட்டம் ஒன்றை அவர்கள் பார்வையிடவுள்ளனர்.

மன்னர் சார்ள்ஸ் அண்மைக்காலமாக சுற்றுச் சூழல் ஆர்வலராகத் தன்னைக் காட்டிக் கொள்கிறார். விமானப் பயணங்களைத் தவிர்த்து வருகிறார். பாரிஸ் – போர்தோ நகரங்களிடையேஅவரது பயணம் ரயில் மூலமே ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த ரயில் ஓய்வூதிய எதிர்ப்பாளர்களால் வழிமறிக்கப்படலாம் என்ற அச்சம் பாதுகாப்புத் தரப்பில் எழுந்துள்ளது.

ரயில் மார்க்கம் முழுவதும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது. மன்னரது போர்தோ வருகையைத் தடுக்கப்போவதாக எதிர்ப்பாளர்கள் தரப்பில் தகவல் கசிய விடப்பட்டுள்ளது.

மன்னரது பாரிஸ் விஜயம் தொடர்பாக இன்னமும் இரு நாட்டுத்தரப்புகளும் தொடர்ந்து ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன என்ற தகவலை ஏஎப்பி நிறுவனம் வெளியிட்டுள்ளது.பயணத் திட்டங்களில் இறுதி நேரத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று தொடர்புடைய வட்டாரங்கள் கூறுகின்றன.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">