சர்வதேச நீதிமன்றம் புடினுக்கு எதிராகக் கைது உத்தரவு!
Kumarathasan Karthigesu
உக்ரைனிய சிறுவர்களை கடத்துவது உட்பட அவர் மீது பல போர்க் குற்றச்சாட்டுகள்.
123 உறுப்பு நாடுகளில் அவர் கால் பதிக்க முடியாத நிலை.
நெதர்லாந்தின் ஹேக்(Hague) நகரில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்(International Criminal Court) ரஷ்யாவின் அதிபர் புடினுக்கு எதிராகச் சர்வதேச கைது ஆணையைப் பிறப்பித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் சிறுவர்களை ரஷ்ய எல்லைக்குள் கடத்துவது உட்படப் பல் வேறு போர் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே எழுபது வயதான புடினைக் கைது செய்யும் உத்தரவு விடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே கைது ஆணை ரஷ்யாவின் சிறுவர் உரிமை ஆணையாளர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா-பெலோவாவுக்கு (Maria Alexeyevna Lvowa-Belowa) எதிராகவும் விடுக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் பிரதேசங்களில் இருந்து குழந்தைகள் மற்றும் சிறுவர்களைச் சட்டவிரோதமாக ரஷ்யாவின் எல்லைகளுக்குள் கடத்தியதாக புடின் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
போர்க் குற்றமாக வகைப்படுத்தப்படக் கூடிய இந்தக் கடத்தல்களில் புடினுக்குத் “தனிப்பட்ட பொறுப்பு” உள்ளது என்று கருதுவதற்குப்”போதிய காரணங்கள் உள்ளன” – என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதன் கைது உத்தரவில் தெரிவித்திருக்கிறது.
சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமெரிக்கா, இந்தியா உட்பட வேறு சில நாடுகளைப் போன்று அதன் நியாயாதிக்கத்துக்குள் தன்னை ஓர் உறுப்பு நாடாக இணைத்துக் கொள்ளாத ரஷ்யாவுக்கு எந்தவித தாக்கத்தையும் உடனடியாக ஏற்படுத்தாது. ஆனால் சர்வதேச நீதிமன்றத்தின் கடப்பாடுகளை மதித்து ஏற்றுக் கொண்ட நாடுகளில் ஏதேனும் ஒன்றில் புடின் கால்பதிக்கும் பட்சத்தில் அங்கு வைத்து அவரைக் கைதுசெய்வதற்கு வாய்ப்புண்டு. அவ்வாறு சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பினர்களாக உள்ள சுமார் 123 நாடுகளுக்கு இனிமேல் புடின் விஜயம் செய்வது கேள்விக்குள்ளாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. புடினின் சுதந்திரமான நடமாட்டங்களை இது தடுக்கும் என்று சர்வதேச சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பை அடுத்து மொஸ்கோ உடனடியாகத் தனது கருத்தை வெளியிட்டுள்ளது. “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது உத்தரவுகள் ரஷ்யாவுக்குப் பொருந்தாது – செல்லுபடியாகாது” என்று மொஸ்கோவில் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மரியா ஷகரோவா (Maria Zakharova) தெரிவித்தார். ரஷ்யா ஹேக் உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த அமைப்புடன் எந்த விதத்திலும் ஒத்துழைக்கவில்லை. அதன் கீழான எந்தப் பொறுப்பும் கடப்பாடும் ரஷ்யாவுக்குக் கிடையாது. – என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து சுமார் ஆறாயிரம் சிறுவர்களை ரஷ்யா கடத்திச் சென்றுள்ளது என்றும் அவர்களில் நான்கு மாதக் குழந்தைகள் முதல் 17 வயது சிறுவர்கள் வரை அடங்கியுள்ளனர் என்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றின் நிபுணர் குழு ஒன்று மதிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவுக்கும் அதன் கட்டுப்பாட்டில் இருக்கின்ற கிறீமியா குடாவுக்கும் கடத்திச் செல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 16 ஆயிரம் என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது உத்தரவை வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு உயர்ந்த தீர்ப்பு என்று கூறி அதிபர் ஷெலென்ஸ்கி வரவேற்றுள்ளார்.