கிரெடிட் சூயிஸ் வங்கியும் ஈடாட்டம்!ஐரோப்பியப் பங்குச் சந்தைகள் சரிந்தன!
Kumarathasan Karthigesu
அமெரிக்காவின் இரண்டு வங்கிகள் திடீரெனச் சரிவைச் சந்தித்ததால் எழுந்த நிதி நிலைப் பதற்றம் ஐரோப்பிய வங்கிகள் மத்தியில் தாக்கத்தைத் தோற்றுவித்துள்ளது. அதனால் ஐரோப்பிய முதலீட்டாளர்கள் மற்றும் நிதிச் சந்தைகள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.
இந்த நிலையில் – சுவிஸ் நாட்டின் முக்கிய பெரிய வங்கியாகிய கிரெடிட் சூயிஸின் (Credit Suisse) பங்கு இன்று புதன் கிழமை மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. சுமார் 30 வீதம் வரை அது சரிந்தது. அதன் எதிரொலியாக ஐரோப்பியப் பங்குச் சந்தைகள் உடனேயே வீழ்ச்சியடைந்தன.
பாரிஸ் பங்குச் சந்தை 3.25% வீதமும் லண்டன் 2.34%வீதமும், பிராங்பேர்ட் (Frankfurt) 2.61% வீதமும் மிலான் (Milan) 3.61% வீதமும் வீழ்ச்சியடைந்தன என்று அறிவிக்கப்படுகிறது.
கிரெடிட் சூயிஸ் வங்கி அதன் மூலதனத்தைப் பெருக்குவதற்கு இனிமேலும் தொடர்ந்து உதவப் போவதில்லை என்று அந்த வங்கியின் பிரதான முதல் பங்குதாரராகிய(first shareholder) சவுதி தேசிய வங்கி (Saudi National Bank) இன்று திடீரென அறிவித்ததை அடுத்தே சுவிஸ் வங்கி பெரும் வீழ்ச்சியைச் சந்திக்க நேர்ந்தது. அதுவே ஐரோப்பிய வங்கிகள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கிவிட்டிருக்கிறது.
கிரெடிட் சூயிஸின் மூலதனத் தளம்பல் பிரான்ஸின் BNP Paribas மற்றும் Société Générale ஆகிய இரண்டு முக்கிய வங்கிகளையும் பாதித்திருக்கிறது.
பிரான்ஸின் பிரதமர் எலிசபெத் போர்னிடம் இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. “இந்த விவகாரம் முழுக்க முழுக்க சுவிஸ் நாட்டு அதிகாரிகளின் பொறுப்புக்குரியது. அவர்களாலே தீர்க்கப்படவேண்டிய பிரச்சினை இது ” என்று அவர் அங்கு பதிலளித்தார். நிதி அமைச்சர் புரூனோ லு மேயர் இன்று பின்னராக இந்த நெருக்கடி குறித்து சுவிஸ் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் மிகப் பலவீனமான வங்கியாகக் கருதப்படுகின்ற சுவிஸ் நாட்டின் “கிரெடிட் சூயிஸ்” வங்கி வங்குரோத்தைச் சந்தித்தால் அது ஐரோப்பிய முதலீட்டுச் சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும்.
சுவிஸின் மிகப் பழைய பாரம்பரியம் மிக்க இந்த வங்கி அண்மைக் காலங்களில் இடம்பெற்ற பெரும் ஊழல் மற்றும் நிதி முறைகேடுகளால் நிதிப் பலவீனத்தைச் சந்தித்துள்ளது.
அமெரிக்காவின் “சிலிக்கென் வாலி” வங்கி (Silicon Valley Bank) கடந்த வார இறுதியில் திடீரென வங்குரோத்தடைந்தது. இப்போது “கிரெடிட் சூயிஸ்”வங்கி ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. இவை உலகளாவிய ஒரு நிதி நெருக்கடியின் அறிகுறியா அல்லது தனித்தனியான வங்கிகளது நிதி விவகாரங்களா என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.