ஓய்வூதியச் சட்டத்தை 49.3 ஷரத்து மூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற முடிவு!
Kumarathasan Karthigesu
எதிர்கட்சிகள் சீற்றம்! அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு முஸ்தீபு!!
விசேட 49.3 பிரிவைப் பயன்படுத்த மக்ரோனின் அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் அரசியல் நிலைவரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் எலிசபெத் போர்னின் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு ஒன்றுக்கான முஸ்தீபு களில் எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளன.
நாடெங்கும் தொழிலாளர்களது போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அரசு இன்று எடுத்துள்ள இத் தீர்மானம் அவர்கள் மத்தியில் மேலும் பெரும் கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது.
ஓய்வு பெறும் வயதை 62 இல் இருந்து 64 ஆக அதிகரிப்பது உட்பட பல திருத்தங்களை உள்ளடக்கிய ஓய்வூதியத் திருத்தச் சட்ட மூலம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தின் மேல் சபையான செனற் சபையில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேறியது. ஆயினும் அது சட்டமாக்கப்படுவதற்கு கீழ்ச்சபையான தேசிய சட்ட மன்றத்திலும் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சட்ட மன்றத்தில் அரசுக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்பது வெளிப்படையாகத் தெரிய வந்த நிலையிலே வாக்கெடுப்பு நடத்தாமலே அரசமைப்பின் 49.3 ஷரத்தைப் பயன்படுத்திச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசு உயர் மட்டம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
அதிபர் மக்ரோன் நேற்றிரவும் இன்று காலையும் பிரதமர் மற்றும் உயர்மட்ட அரசுப் பிரமுகர்களுடன் பல தடவைகள்முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டார். சட்ட மூலம் நாடாளுமன்ற ஜனநாயக முறைப்படி உறுப்பினர்களது வாக்கெடுப்புக்கு விடப்படும் என்றே செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. சட்ட மூலத்தை முறியடிப்பதற்கான உத்திகளில் பிரதான எதிர்க்கட்சிகளும் தமக்குள் ஆலோசனைகளை நடத்திவந்தன.
சட்ட மூலம் தோற்கடிக்கப்பட்டால் அதிபர் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலுக்கு உத்தரவிடக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்த நிலையிலேயே வாக்கெடுப்பை நடத்தாமல் மாற்று வழியில் அரசமைப்பின் சிறப்புப் பிரிவைப் பயன்படுத்துவது என்ற ஆபத்தான அரசியல் நகர்வை மக்ரோன் முன்னெடுத்திருக்கிறார்.
அரசு அவ்வாறு ஆபத்தான அரசியல் வழி முறையை நாடினால் ஜனநாயக வழிமுறைகளில் நம்பிக்கை இழந்துள்ள தொழிலாளர்களது இயக்கம் தீவிரவாதப் பாதைக்குத் திரும்பக் கூடும். அது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்புகளை உருவாக்கி விடலாம் என்று உள்நாடு உளவு சேவை ஓர் ரகசிய அறிக்கையில் அரசை சில தினங்களுக்கு முன்பு எச்சரித்திருந்தது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டிராத எலிசபெத் போர்னின் அரசு, சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு வலதுசாரி ரிப்பப்ளிக்கன் கட்சி உறுப்பினர்களது ஆதரவிலேயே தங்கியிருக்கின்ற நிலை உள்ளது. ஆனால் வலதுசாரிக் கட்சியின் உறுப்பினர்கள் ஓய்வூதியத் திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதில் இரண்டாகப் பிளவுபட்டு நிற்கின்றனர். இதனால் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை எட்டாக் கனி என்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது.
ஒக்ரோபர் 4, 1948 ஆம் ஆண்டின் ஐந்தாவது குடியரசு அரசமைப்பில் அரசாங்கத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான உறவுகளை (Relations between Parliament and the Government ”) விவரிக்கின்ற 34-51 வரையான ஷரத்துக்களில்(articles 34 to 51) ஒரு பிரிவே 49.3 விதி ஆகும்.
அது நாடாளுமன்றத்துக்கு முன்னால் அரசாங்கத்துக்கு இருக்கின்ற அதிகாரங்களை வரிசைப்படுத்துகின்றது. 49.3 விதி என்பது நாட்டின் நலனுக்கு அவசியமான சட்டங்களை நிறைவேற்ற முடியாத- பெரும்பான்மை அற்ற-சூழ்நிலைகளில் வாக்கெடுப்பைத் தவிர்த்துவிட்டு சட்ட மூலங்களை நகர்த்திச் செல்வதற்குப் பிரதமருக்கு அதிகாரம் அளிக்கின்றது. எலிசபெத் போர்ன் அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் சில சட்ட மூலங்களை நிறைவேற்ற முயற்சித்த போது எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்காத சந்தர்ப்பங்களில் ஏற்கனவே சில தடவைகள் இந்த விதியைப் பயன்படுத்தியுள்ளது.