அமெரிக்காவின் புதிய தேசபக்தி பொருளாதார கொள்கைள் இனி யாருக்கானது?
- கௌரி பரா -
Human development, as an approach, is concerned with what I take to be the basic development idea: namely, advancing the richness of human life, rather than the richness of the economy in which human beings live, which is only a part of it.
Amartya Sen
Economist, philosopher and writer
1998 ல் இருந்து இன்று வரையிலும் அமெரிக்காவில் கிட்டத்தட்ட எழுபதினாயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன 2.4 மில்லியன் தொழிலாளர்கள் வேலை இழந்தனர்
இதன் காரணமாக அந்த தொழிற்சாலைகளை சுற்றி சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த நகரங்களில் வாழ்ந்த மக்கள் பிழைப்பைத்தேடி வெளியூர்களுக்கு செல்ல இந்த நகரங்கள் சோபையிழந்து வெறிச்சோடிப்போய் பேய் நகரங்களாக (ghost towns) மாறின.
அமெரிக்காவின் தொழிற்சாலைக்கூடமாக பல தசாப்தங்களாக சீனா மாறிவந்துள்ளது. அமெரிக்காவில் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தேவைப்படும் செலவில் ஒரு சிறிய தொகையே சீனாவில் அந்த தொழில்சாலைகளை இயக்க தேவைப்படும் என்பதனால் அமெரிக்க தொழில்ச்சாலைகள் சீனாவிற்கு இடம்பெயர்ந்தன. அது அமெரிக்காவைப்பொறுத்தவரையில் அப்போது வசதியாக இருந்தது என்பது உலகறிந்த உண்மை.
அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை சீனா அதனது தொழிற்சாலைகளில் பாவித்தது. சீனாவின் தொழில்ச்சாலைகளில் குறைந்த சம்பளத்தில் கூடிய நேரம் இயந்திரங்களோடு இயந்திரமாக வேலை பார்க்க தேவையான தொழிலாளிகள் இலகுவாக கிடைத்தார்கள்.
சீனாவின் வளர்ச்சியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும் அமெரிக்காவை மீளவும் ஒரு் உற்பத்தி நாடாக மாற்றவும் சமகால அமெரிக்க அரச நிர்வாகம் பல திட்டங்களை வகுத்துள்ளது, அதற்காக பிரத்தியேகமாக சில சட்டங்களை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது அதில் முக்கியமாக இருப்பது Inflation Reduction Act 2022 மற்றும் Chips and Science Act 2022 . இதன் மூலம் அமெரிக்கா clean energy ஐ உருவாக்க தேவையான கனிமங்களான லித்தியம், கோபல்ற் போன்றவற்றை தேடவும் மற்றும் செயற்கையான synthetic graphite கிராஃபற் ஐ அமெரிக்காவில் தயாரிக்கவும் ஆவன செய்யும்.
உலக வணிகம் என்ற விடயம் பற்றி பேச்சு வந்தாலே இரண்டு சொல்லாடல்கள் அங்கு அடிபடும்.
ஒன்று Trade deficit மற்றது trade surplus. இரண்டு நாடுகள் ஏற்றுமதி இறக்குமதி என்ற வர்த்தக உறவில் ஈடுபடும்போது சம்பந்தப்பட்ட நாடுகளின் பரஸ்பர ஏற்றுமதி இறக்குமதியில் சம நிலை அற்ற தன்மை காணப்படுவது இயல்பு. இந்த சமநிலை அற்ற தன்மையினால் ஒரு நாடு நஷ்டத்திலும் இன்னொரு நாடு லாபத்திலும் இயங்கிக்கொண்டுருக்கும்.
இப்படி நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நாடுகளுக்கு உதவி செய்யும் முகமாக உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனமான சர்வதேச நாணய நிதியம் (IMF ) இருக்கிறது.
1970 ல் இருந்து சர்வதேச நாணய நிறுவனம் ஏற்றுமதி இறக்குமதி ஏற்றத்தாழ்வுகளினால்
திவாலான நாடுகளுக்கு கடன் வழங்கி வந்துள்ளது.
1985 ற்கும் 2000 ற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இருந்த வர்த்தக பற்றாக்குறை/ வணிக சமநிலையின்மை $6 பில்லியன் டொலர்களில் இருந்து $83 பில்லியன் டொலர்களை தாண்டியது.
மேலும் 2000 ஆம் ஆண்டுகளில் சீனா உலக வர்த்தக நிறுவனத்தில் (World Trade Organisation ) அங்கத்துவம் பெற்று இணைக்கப்பட்டதன் பின்னர் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள வர்த்தக சமநிலையற்ற தன்மை (trade deficit )ஊதிப்பெருத்து விட்டது என்று அமெரிக்கா லிபரல் ஐனநாயகவாதிகள் சீற்றம் கொள்கிறார்கள்.அத்தோடு சீன அரசு சீன தொழில்ச்சாலைகளுக்கு நிதி உதவி வழங்குவதனாலும் சீன நாணயத்தை செயற்கையாக குறைத்து ( currency depreciation) வைத்திருப்பதனாலும் குறைந்த ஊதியத்தில் தொழில்ச்சாலைகளில் மனிதர்களை வேலைக்கு அமர்த்துவதாலும் இந்த அபார வளர்ச்சி அதற்கு சாத்தியாமாயிற்று. ஆகவே சீனாவின் வளர்ச்சிக்கு பின்னால் மக்களுக்கு எதிரான ஐனநாயகமற்ற தன்மைகள் காணப்படும் அதே நேரம் அமெரிக்கர்களின் வாழ்க்கைதரம் இதனால் குறைந்து விட்டது என்று குற்றம் சாட்டுகிறது.
கிறீஸ் நாடு திவாலாவதற்கு முன்னர் பல ஆண்டுகளாக ஜேர்மனி கிறீஸ் நாட்டுக்கும் மற்றும் பல நாடுகளுக்கும் அந்த நாடுகளில் இருந்து அது இறக்குமதி செய்யும் பொருட்களை விட பல மடங்கு அதிகமாக ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. குறிப்பாக கார்களை. ஆகவே ஜேர்மனி எப்போதும் trade surplus லும் கிறீஸ் எப்போதும் trade deficit லும் இருந்து வந்தது.
கிறீஸ் ற்கு ஜேர்மனி தான் உற்பத்தி செய்யும் கார்களை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. கிறீஸ் ஒரு trade deficit நாடாக இருந்த காரணத்தினால் அதன் கொள்வனவுகளை செய்ய ஜேர்மன் வங்கிகளே கீறீஸ் நாட்டிற்கு கடனை வழங்கியும் வந்தது… நாளாக நாளாக கீறீஸ் ஜேர்மன் நாட்டிற்கு கடனை கட்ட முடியாமல் திகைத்து நின்ற போது சர்வதேச நாணய நிதியம் ஜேர்மன் வங்கிகளில் கிறீஸ் வழங்கிய கடனை அடைக்க கிறீஸ் நாட்டிற்கு பல நிபந்தனைகள் அடிப்படையில் கடன் உதவி வழங்க முற்பட்டது.
மற்ற நாடுகளைப்போல் அமெரிக்காவிற்கு இந்த trade deficit ல் இருந்து தன்னை பாதுகாக்க சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏனெனில் சீனா வங்கி, ஐப்பானிய தொழிலதிபர்கள், ஐரோப்பிய தன்னலவாதக்குழுக்களும் எனப்பலர் அமெரிக்காவின் முதலீட்டு வங்கியான Wall Street ற்கு தொடந்தது தங்கள் பணத்தை அனுப்பிய வண்ணம் இருந்தன.
அமெரிக்காவைப்போலல்லாது கடனில் இருக்கும் மற்ற நாடுகள் தாங்கள் பட்ட கடனை அடைக்க நாட்டின் சொத்துக்களை சர்வதேச நாணய நிதியம் சிபாரிசு செய்யும் இடங்களில் அடகு வைக்க வேண்டிய நிலையில் இருப்பதோடு சர்வதேச நாணய நிதியம் விதிக்கும் நிபந்தனைகளுக்கும் ஒத்துப்போக கடமைப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் வணிக பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய Wall Street முதலீட்டு வங்கிகளை நோக்கி தினமும் வந்து குவிந்த பணத்தை financial market என்னும் நிதிச்சந்ததையில் 2008 ல் முதலீட்டாளர்கள் இழந்தனர். எதிர்கால லாபத்தை அதிகமாக ஊகித்த முதலிட்டார்களின் முதலீடுகளின் Speculative bubbles என்று சொல்லக்கூடிய ஊக குமிழிகள் உடைந்து போனதில் 2008 ஆம் ஆண்டு அமெரிக்கா உட்பட உலத்தில் பல நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வந்திருக்கிறது.
பொறுப்பற்ற விதத்தில் நிதிச்சந்தையினால் பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பாக இடதுசாரி கல்வியாளர்கள் மற்றும் புரட்சியாளர்கள் தலைமையில் Occupy Wall Street என்ற ஒரு எதிர்ப்பு இயக்கத்தை திரட்டி அதை மக்கள் புரட்சியாக 2011 ல் மாற்றினார்கள். நியூ யோர்க் Wall street முன்னால் பல்லாயிரம் மக்கள் கூடி அங்கேயே தற்காலிக கொட்டகைகளை அமைத்து மாதக்கணக்கில் படுத்து உறங்கி புரட்சி செய்தனர், அந்த கட்டடங்களுக்கு உள்ளே ஊழியர்கள் சென்று வேலை பார்ப்பதை நிறுத்தும் முகமாக இந்த occupy Wall Street என்ற நிதி நிறுவனத்திற்கு எதிரான புரட்சி இருந்தது. பின்னர் அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தீயாகப்பரவியது, தொடர்ந்து லண்டனில் உள்ள stock Exchange கட்டடத்திற்கு முன்னாலும் உலகெங்கும் உள்ள நிதிநிறுவனங்கள் முன்னாலும் 750 OWS ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இரண்டு மாதங்களாக தொடர்ந்து நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களின் மூலம் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் வர்த்த ஒழுங்கு நிர்வாகத்தில் எந்த ஒரு மாற்றமும் நடக்கவில்லை என்பது பெரும் சோகம் என்றாலும் பாரிய அளவு மக்கள் இந்த போராட்ங்களில் கலந்து கொள்ள தயாராக இருந்தனர் இருக்கின்றனர் என்பது தெளிவாகியது.
முதலாளித்துவ பொருளாதாரம் வளர்ச்சி பெற்று இன்னொரு கட்டத்திற்கு நகர்ந்து விட்டதை உணராமல் தொடர்ந்தும் வங்கிகளினதும் பெரும் நிதி நிறுவனங்களினதும் கட்டடங்களின் வாசல்களை அடைப்பதில் அந்த கட்டடங்களை சேதப்படுத்துவதிலும் ஏதும் பயனில்லை என்பதை ஐரோப்பிய பொருளாதார நிபுணர்
யானிஸ் வஃருகாக்கியாஸ் அவர் எழுதிய Another Now என்ற புத்தகத்தில் ஒரு திருக்குறள் போல இரண்டே இரண்டு வரிகளில் கூறுகிறார்.
“ Capitalism does not live in space , it exists in the ebbs and flows of financial transactions”
அமெரிக்காவில் மட்டுமல்லாது உழைக்கும் வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையில் இருக்கும் வருமான ஏற்றத்தாழ்வின் மூல காரணமாக இருப்பது முதலாளித்துவமும் முதலாளித்துவத்திற்கு முட்டுக்கொடுக்கும் லிபரல் ஐனநாயக அரசியல்வாதிகளும் தான் என்பது தான் உண்மை. அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் இந்த பிரச்சனைக்கு மூல காரணம் சீனாக் அரச கொம்முனிசத்தின் கட்டற்ற வளர்ச்சியே காரணம் என்று கருத்தை பல தசாப்தங்களாக அமெரிக்க லிபரல் ஐனநாயகவாதிகள் மக்கள் மத்தியில் விதைத்து வருகிறார்கள்.
டொனால்ட் றம் ஆட்சிக்காலத்தில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப்போர் கொதிநிலையில் இருந்தது, டொனால்ட் றம்ப் ன் America First என்ற பொருளாதார கொள்கை மூலம் சீனாவின் இறக்குமதி மீது பாரிய (tariff )வருவாய் வரியை விதித்தார் , அந்த காலகட்டத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு 30 லிருந்து 50 வீதமாக கூடியது குறிப்பாக சோலர் பனல்களுக்கு ,அமெரிக்காவிற்கும் அதோடு வர்த்தக செய்த இந்தியா போன்ற பல நாடுகளுக்குமிடையில் வர்த்தக போர் மூண்டது, அதனால் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் நடுவில் நிலவிய trade deficit என்ற வணிக சமநிலையின்மையிலிருந்து அமெரிக்காவால் ஓரளவிற்கு மீள முடிந்தது, 2018 லிருந்து 2020 வரையில் சுமார் $100 பில்லியன்கள் trade deficit ல் இருந்து குறைந்தது. 2020 ல் கோவிட் காரணமாக வீட்டில் இருந்த மக்கள் நிறைய பொருட்களை கொள்வனவு செய்ய மீண்டும் 2021 ல் சீனாவில் இருந்து $135 பில்லியன்கள் பெறுமதியான மின்சார இயந்திரங்களும் semiconductor களும் இறக்குமதி செய்யப்பட்டன.
ஆனால் டொனால்ட் றம்ப் நாட்டிற்குள் மீளவும் தொழில்ச்சாலைகளை உருவாக்க முனையவில்லை. அதனால் மக்கள் தொழில் இழந்தும் வருமானம் குறைந்தும் இருக்கிறார்கள் இவர்கள் கோவம் தீரவேண்டும் என்றால் மீண்டும் அமெரிக்காவை தொழில்ச்சாலைமயப்படுத்தி மக்களுக்கு வேலை வாய்ப்பை தந்து அவர்கள் கோவத்தை தீவிர வலதுசாரிக்கட்சிகளை ஆதரிக்கா வண்ணம் இருக்கவும் வழிவகுக்கும் . மேலும் நாடு தொழில்ச்சாலை மயப்படுத்தப்படும்போது மீண்டும் நாட்டில் மீண்டும் தொழில்சங்கங்கள் உருவாகி ஐனநாயகத்தை நிலைநாட்டவும் வழிவகுக்கும் என்பதாக இன்று லிபரல் அரசியல்வாதிகள் அறிக்கை இருக்கிறது. இதன் பிரகாரம் Inflation Reduction Act 2022 மற்றும் Chips and Science Act மூலம் அமெரிக்காவை மீண்டும் உற்பத்தி நாடாக்க $400 பில்லியன்களை ஒதுக்கியிருக்கிறது இந்த நிதியின் பெருந்தொகை மின்சாரக்கார்களை அமெரிக்காவில் தயாரிக்க கோப்பரேட் கொம்பனிகளுக்கு உதவியாக வும் இருக்கப்போகிறது, மேலும் $20 பில்லியன் தொகை செலவில் Intel semiconductor தொழிற்சாலையை ஓஹியோ மாநிலத்தில் திறக்கிவிருக்கிறது. மேலும் தாய்வான் நாட்டில் இருக்கும் லித்தியம் மின்கலன்களை தயாரிக்கும் தொழில்ச்சாலைகளை மீளவும் அமெரிக்காவிற்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
மொத்தத்தில் சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த மீண்டும் அமெரிக்காவை தொழில்ச்சாலை நாடாக மாற்றினால் உலக வர்த்தகப்போட்டியில் அமெரிக்கா முன்னிலையில் நிற்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதில் சந்தேகம் இல்லை.
அதே நேரம் வருமான வரிப்பணம் செலுத்தும் அமெரிக்க உழைக்கும் வர்க்கம் முழுநேரத்தொழிலாளர்களாக மாறி உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகி வெறுமனே அமெரிக்க அரசின் வெற்றிக்கு பின்னால் இருப்பார்கள். அமெரிக்காவின் இந்த மாற்றத்தை Economic Patriotism அதாவது பொருளாதார நாட்டுப்பற்று எண்று அழைக்கிறார்கள், அதாவது நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டே இத்தகைய உள்நாட்டு வெளிவிவகார கொள்கைகள் அமெரிக்க அரசினால் வகுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
Inflation Reduction Act 2022 மற்றும் Chips and Science Act 2022 மூலம் மக்கள் வரிப்பணத்தில் பயன்பெற்ற பெரும் நிறுவனங்களின் முதலாளிகள் மீண்டும் பெரும் பணக்கார்ர்கள் ஆவார்கள், அவர்கள் எத்தனை பில்லியன்களை லாபமாக ஈட்டினார்கள் என்ற கணக்கு வழக்கை அரசு மக்களுக்கு அறிவிக்க போவதில்லை, தானமாக அளிக்கப்பட்ட மக்கள் வரிப்பணத்தை திருப்பி அவர்கள் அரசுக்கு தரவேண்டியதில்லை , ஆக மொத்தம் முதலாளித்துவத்தில் திரும்ப திரும்ப சுயநலமாக இயங்க அமெரிக்க லிபரல் அரசுகள் துணை போகின்றன.
முதலாளித்துவத்தை எதிர்க்க Occupy Wall Street என்ற போராட்டத்தில் இருந்து இடதுசாரிகளும் தொழிலாளர்கள் வர்க்கமும் ஏதாவது பாடம் படித்திருப்பார்களானால் நாம் வாழும் கணனி யுகத்தில் முதலாளித்துவத்தின் மூலாதாரத்தின் மரபணுக்கூறுகளி்ல் மாற்றங்களை நிகழ்த்தும் போராட்டங்களில் ஈடுபட்டு பெரும் மாற்றங்களை நிகழ்த்த வாய்ப்புக்கள் இனி அதிகம் என்றே நம்பத்தோன்றுகிறது.