15 ஆம் திகதி போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானம்.

பல தடவைகள் கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதிய போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கவுள்ளதுடன் அன்றைய தினம் பெற்றோர் தமது பிள்ளைகளின் பாதுகாப்பினை உறுப்படுத்திக்கொள்ளவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொ.உதயரூபன் தெரிவித்தார்.

இன்று மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,நாளை மறுதினம் புதன்கிழமை நாடளாவிய ரீதியில் நடத்தப்பட இருக்கின்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கமும் கலந்து கொள்ளவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண இணைப்பாளருமான பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்தார்.

நாளை மறுதினம் நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்வூடகச் சந்திப்பு மட்டு. ஊடக அமையத்தில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை மாலை (12) இடம்பெற்றது.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் குறிப்பிட்டவை வருமாறு:-

இவ்வேலை நிறுத்தப் போராட்டமானது கடந்த காலங்களில் பெரும் அச்சுறுத்தல்களுக்கும், அடாவடித்தனங்களுக்கு  மத்தியில் எமது சாத்வீகப் போராட்டத்தினை  வென்றெடுப்பதற்காக நடத்திய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பள முரண்பாட்டில் மூன்றிலொரு பங்கினை நாம் வென்றெடுத்தோம்.

மீதி மூன்றில் இரண்டு பங்கினை வென்றெடுப்பதற்கான எமது சாத்வீக போராட்டத்துக்கு மத்தியில் நாம் பல தடவைகள் கல்வியமைச்சுடன் பேச்சு நடத்திய போதும் அவை யாவும் தோல்வியடைந்த நிலையில் நாம் எதிர்வரும் புதன்கிழமை   சகல தொழிற் சங்கங்களுடன் இணைந்து இப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

எமது சாத்வீகப் போராட்டத்தின் மூலமாக நாங்கள் வென்றெடுத்த இலங்கை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களது போராட்டத்தின் மூலமாக இது ஒரு வரையறுக்கப்பட்ட சேவையாகக் கருதப்பட்டு, 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 30 ஆம் திகதி அதிவிஷேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டது.

அந்த அதிவிஷேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற வரையறுக்கப்பட்ட சேவையில் உள்வாங்கப்பட்ட இந்த மூன்று சேவைகளினதும் சிறப்பம்சங்களை வென்றெடுப்பதற்காக பல்வேறான பேச்சுவார்த்தைகளைக் கல்வியமைச்சு, கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் அதனோடு தொடர்புடையவர்களுடன் மேற்கொண்டோம்.

இந்நிலையில் சம்பளத் திட்டமொன்றை வகுக்க வேண்டிய கடமை கல்வியமைச்சுக்கு இருக்கின்றது. இருந்தும் கூட கல்வியமைச்சு எந்தவித அக்கறையும் இல்லாத நிலையில் செயற்படுகின்றது.

இவ்வாறான நிலையில் இன்றைய பொருளாதார சிக்கலில் அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பெரும்பாலான உத்தியோகத்தர்கள் இருக்கின்ற நிலையில் ஏனைய தொழிற் சங்கங்களால் நடத்தப்படுகின்ற போராட்டத்தில் நாங்களும் கலந்து கொள்ள வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

மேலும் 15 ஆம் திகதி நடைபெறுகின்ற போராட்டத்தின் போது பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் பாதுகாப்புக் கருதி, செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.

இதேவேளை க.பொ.த (உயர்தரப்) பரீட்சைகள் முடிவடைந்த போதிலும் இதுவரை பரீட்சை வினாத்தாள்கள் திருத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது.

இந்தப் பொறுப்பினையும் ரணில்- ராஜபக்ஷ அரசே பொறுப்பேற்க வேண்டும் என்பதைப் பகிரங்கமாகக் குறிப்பிட்டாக வேண்டும். ஏனெனில் க.பொ.த (உயர்தரப்) பரீட்சைப் பெறு பேறுகள் வெளியிட்டால்தான் இம்மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இதனால் ஏனைய பரீட்சைகள் நடைபெறும் காலமும் பின்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

அதாவது நாங்கள் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுக்காகக் கேட்ட இடைக் காலக் கொடுப்பனவான 3000 ரூபாவை வழங்க இன்னும் தீர்மானம் எடுக்காத நிலையில் உள்ளனர்.

இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எமது சக ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் ஆகியோருக்கு இடைக்காலக் கொடுப்பனவாக 20000 ரூபாவோ, 25000 ரூபாவோ தர வேண்டுமென்பதை மிக முக்கியமான கோரிக்கையாக முன்நிறுத்தி போராடவுள்ளோம்.

இந்நிலையில் அன்றைய தினம் நடைபெறவுள்ள போராட்டத்தில் சகல அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் அனைவரும் எமது போராட்டத்தில் இணைந்து, அதன் மூலமாக ரணில் – ராஜபக்ஷ குடும்ப ஆட்சிக்கு சரியான ஓர் அழுத்தத்தைக் கொடுத்து வெற்றி பெற உதவுங்கள்- என்றார்.