இன்புளூயன்சா காய்ச்சல் பாதித்தவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்: நல்வாழ்வுத் துறை அறிவிப்பு.
இன்புளூயன்சா காய்ச்சல் பாதித்தவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. சென்னை சைதாப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை முழுவதும் 200 இடங்களிலும், தமிழ்நாடு முழுவதும் 800 இடங்களிலும் இந்த முகாம் நடைபெறுவதாக கூறினார். எச்3என்2 வகை வைரஸ் காய்ச்சல் பரவும் தன்மை கொண்டதால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிந்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக அமைச்சர் கூறினார்.
காய்ச்சல், தொண்டை வலி, சோர்வுடன் பாதிப்பு ஏற்படுகிறவர்கள் கொரோனா விதிமுறைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்றவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய அளவில் மருந்து கையிருப்பில் இருப்பதாகவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.