தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமியின் போட்டோவை எரித்து பா.ஜ.கவினர் போராட்டம்
பாஜகவில் இருந்து நேற்று முன் தினம் விலகிய தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார், அண்ணாமலையை பெயரைக் குறிப்பிடாமல் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார். அதில் ‘சொந்தக்கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவம் இல்லை. அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையைப் பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்ததுதான் மிச்சம்’ என்று அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பா.ஜ.கவிலிருந்து விலகினார்.
மேலும், 420 மலை என்றும் குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து உடனடியாக அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அ.தி.மு.கவில் இணைந்துகொண்டார். அவரைத் தொடர்ந்து, பா.ஜ.க மாநிலச் செயலாளராக இருந்த திலீப் கண்ணன் பா.ஜ.கவிலிருந்து விலகியுள்ளார். கனத்த இதயத்துடன் விலகுவதாக குறிப்பிட்டார்.இந்தநிலையில், பா.ஜ.க நிர்வாகிகள் திலீப் கண்ணன், அறிவுசார் பிரிவின் முன்னாள் மாநிலச் செயலாளர் கிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலச் செயலாளர் அம்மு என்கிற ஜோத, திருச்சி புறநகர் மாவட்ட துணைத் தலைவர் விஜய் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அ.தி.மு.கவில் இணைந்து கொண்டனர்.இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க தலைமையை விமர்சித்து கட்சியிலிருந்து வெளியேறியவர்களை அ.தி.மு.கவில் இணைத்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பா.ஜ.க சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், ‘எங்கள் அண்ணன் அண்ணாமலையை கீழ்த்தரமாக விமர்சனம் செய்து பா.ஜ.கவிலிருந்து விலகிய நிர்வாகியை அ.தி.மு.கவில் சேர்த்துக்கொண்ட கூட்டணித் தர்மத்தைப் போற்றத் தவறிய துரோகி எடப்பாடி பழனிசாமியைக் கண்டிக்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எடப்பாடி ஒரு துரோகி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அ.தி.மு.க, பா.ஜ.க இடையை மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.