சீனாவில் பெண் மாடல்களுக்கு அந்நாட்டு அரசு விதித்துள்ள தடையால் சர்ச்சை

சீனாவில் பெண் மாடல்களுக்கு அந்நாட்டு அரசு விதித்துள்ள குறிப்பிட்ட தடையால் அங்கு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சீனாவில் குடிமக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. பொது இடங்களில் போராட்டம் நடத்த தடை, அரசுக்கு எதிரான கருத்துக்கு தடைஇ சமூக வலைதளங்களுக்கு தணிக்கை உள்ளிட்ட ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. இதன் காரணமாக பொதுமக்களிடம் சீன அதிபர் நாளுக்கு நாள் எதிர்வினைகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், புதியதொரு கட்டுப்பாட்டை பெண்களுக்கு சீன அரசு விதித்துள்ளது.

அதாவது, மாடலிங்கில் பணி செய்யும் பெண்கள் உள்ளாடை தொடர்பான விளம்பரங்களில் நடிப்பதற்கும், லைவ் ஸ்ட்ரீமிங் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் உள்ளாடை விளம்பரங்களில் பெண்களுக்கு பதிலாக ஆண்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். சீனாவை பொறுத்தவரை அங்கு லைவ் ஸ்ட்ரீமிங் காட்சிகளுக்கான வர்த்தகம் அதிகம் என்று அங்குள்ள வர்த்தக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதனாலேயே லைவ் ஸ்ட்ரீமிங்கை புறக்கணிக்காமல் ஆண்கள் பலர் தற்போது பெண்கள் பயன்படுத்தும் உள்ளாடைகளுக்கு மாடல்களாக நடித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையே, பெண்களுக்கு பதிலாக ஆண்கள் நடிக்கும் விளம்பரங்கள் டிக் டாக்கில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஆபாச ரீதியான வீடியோக்களை தடுக்கவே இந்த தடை கொண்டுவரப்பட்டதாக சீன அரசால் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இது பெண்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் செயல் என்று பெண்கள் நல அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றன.