ஈழத்து இலக்கியங்கள் 18ம் நூற்றாண்டுக்குப் பின்னரே தோன்றின. பேராசிரியர் அ.ராமசாமியின் கருத்து மீது சாம் பிரதீபன் அதிருப்தி!

ஈழத்து இலக்கியங்களுக்கு 700 வருட வரலாறு இருக்கின்றது என்பது ஏன் எமக்கு தெரியாது - சாம் பிரதீபன் -

ஈழத் தமிழர்களுக்கு கலை இலக்கிய வாழ்வியல் முறைமைகளில் தனித்துவமான ஒரு நீண்ட பாரம்பரிய வரலாறு இருக்கின்றது என்பதை பலரும் இலகுவாகத் தட்டி விட்டுப் போவதற்கும், அந்த தட்டி விடுதல்களோடு சம்மதித்து சமரசம் செய்து கொண்டு நாங்கள் நகர்வதற்கும் தனிப்பட்ட பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இந்த நிராகரிப்புகளுக்குப் பின்னாலும் எதிர்வினையாற்ற திராணியற்ற மனநிலைகளுக்குப் பின்னாலும் ஒழிந்திருக்கின்ற அரசியல் குறித்து எனக்கு எப்போதும் ஒரு நெருடல் இருந்தபடியே இருக்கின்றது.

 

அண்மையில் லண்டன் திரள் இலக்கிய அமைப்பினர் ‘உலகத் தமிழ் இலக்கியத்தின் பயணத் தடங்கள்’ என்ற தலைப்பில் ZOOM செயலியூடாக நடத்திய  கலந்துரையாடலில், பேராசிரியர் அ.ராமசாமி அவர்களின் கருத்து நிலை தொடர்பாக எனக்கெழுந்த அதிருப்தியும் அவர் மேற்கோளிட்ட புள்ளிவிபரத் தரவுகளில் இருந்த தவறுமே இது பற்றி எழுத வேண்டும் என்ற ஒரு மனநிலையை எனக்கு ஏற்படுத்தியிருந்தது. துரதிஷ்டவசமாக அந்த நிகழ்வில் நான் நேரடியாக கலந்து கொள்ள முடியாமையால் எனது இந்த மனப்பதிவை குறித்த அந்த நிகழ்வில் என்னால் பதிவிடமுடியாமல் போயிருந்தமை மனக் குறையே. ஆனால் அங்கு கலந்து கொண்டிருந்த புத்திஜீவிகளில் பலரும் இக் கருத்து நிலை தொடர்பாக ஏன் மூச்சுவிடவில்லை என்பதும் அப்படியே அனைத்தையும் ஏற்றுக் கொண்டிருந்த மௌன நிலை என்பதும் இப்போது வரை எனக்கு சங்கடமாகவே இருக்கின்றது. வகுப்பறைகளில் கூட மாற்றுப் பார்வைக்கு கதவுகள் திறபட்டிருக்கும் இக்காலத்தில் ஒரு இலக்கிய கலந்துரையாடலில் இது ஏன் சாத்தியப்படவில்லை எனபதற்கு என்னிடம் இப்போது பதில் இல்லை.

 

‘இலக்கியம்’ என்ற பதத்திற்கு இப்போதெல்லாம் என்ன விதி வைத்திருக்கின்றோமோ நான் அறியேன் ஆனால் இலக்கியம் என்ற சொல்லாட்சி மிகப் பரந்த விசாலமான ஒரு பரப்பு என்றே நான் கருதுகின்றேன்.
ஈழத்து இலக்கியங்களுக்கு 18ம் நூற்றாண்டுக்குப் பிந்திய 200 வருடப் பாரம்பரியம் தான் இருக்கின்றது என்ற பேராசியர் அ.ராமசாமி அவர்களின் கருத்து இன்னும் ஆழமாக மீள் பார்வை செய்யப்படலாம் என்பது எனது தாழ்மையான விண்ணப்பம்.

 

வெறும் ஊகங்களாலும், ‘இருக்கலாம்’ அல்லது ‘அப்படி இருந்திருக்க வாய்ப்பிருக்கின்றது’ என்ற கருதுகோளுக்குள்ளும் நிற்கும் ‘ஈழத்து பூதந்தேவனார்’ பற்றியும், சங்ககால செய்யுள்களில் அவர் எழுதியதாக கூறப்படும் இலக்கிய வகையறாக்கள் பற்றியும் நிரூபிக்க முடியாத உண்மைகள் பல இருப்பினும், அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால் கூட 700 வருட நிருபணப் பாரம்பரியம் கொண்டிருக்கின்றது ஈழத்து இலக்கியம். அதற்கான பல ஆய்வுகளும் ஆய்வு வெளிப்பாட்டு நூல்களும் கூட எம்மிடம் இருக்கின்றன.

 

இலங்கையின் முதல் நூல் என்று அழைக்கப்படும் ‘சரசோதி மாலை’ கி.பி.1310 இல் எழுதப்பட்டிருக்கின்றது எனக் கூறுகிறது 1997 இல் வெளிவந்த கலாநிதி துரை மனோகரனின் ‘இலங்கையின் தமிழ் இலக்கிய வளர்ச்சி’ என்னும் ஆய்வு நூல். இலங்கையின் தம்பதேனியாவில் ஆட்சி புரிந்த நான்காம் பராக்கிரமபாகுவின் அவைக்களப் புலவராக இருந்த தேனுவரைப் பெருமாள் என்ற இயற்பெயரைக் கொண்ட போசராச பண்டிதர் எழுதிய இந்த நூலே ஈழத்தின் ஆகப் பழைய தமிழ் நூல் என்கிறது இந்த ஆய்வு நூல். விருத்தப்பாவால் அமைந்த இந்த நூல் பன்னிரெண்டு படலங்களையும் 934 செய்யுள்களையும் கொண்டுள்ள தரவுகள் ஆய்வுகளில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது.
பூமாது மேவு தோளான்
பொற்கம லத்து வாழு
மாமாது சேரு மார்பன்
மாமணி நாட னெங்கோன்
காமானுஞ் செங்கை வள்ளல்
கதிரவன் மரபில் வந்தோன்
பாமாலை சூடு மீளிப்
பராக்ரம வாகு பூபன்

 

என்று பராக்கிரமபாகுவை பெருமைப்படுத்தும் பாயிரத்தோடு தொடங்குகிறது இந்த சரசோதி மாலை.
ஆக, கிடைத்திருக்கக்கூடிய ஆகப் பழைய நூலில் இருந்து எண்ணத் தொடங்கினாலேயே ஈழத்து இலக்கியத்திற்கு 13ம் நூற்றாண்டில் இருந்து பெருந் தரவுகள் விரவிக் கிடக்கின்றன.

 

யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் இருந்து தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் கொடுத்த முக்கியத்துவமும் யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் பல இலக்கியச் செழுமைகள் தோன்றியிருக்கின்றமையை உறுதிப்படுத்தும் சான்றுகளும் ஒழித்து வைக்கப்பட்டிருக்கின்ற தரவுகள் அல்ல.
யாழப்பாணத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட இரகுவமிசம், பரராசசேகரன் உலா, வியாகியபார புராணம் போன்ற இலக்கியங்களும்
வையா பாடல், கைலாய மாலை, இராச முறை போன்ற வரலாற்று நூல்களும்
செகராசசேகரமாலை என்னும் சோதிட நூலும்
செகராசசேகரம், பரராசசேகரம் என்ற வைத்திய நூல்களும் எழுதப்பட்டிருக்கின்றன.
அதேபோல திருகோணமலையை மையப்படுத்தி
தசஷிணகைலாச புராணம், திருக்கரைசப் புராணம், போன்ற தலபுராணங்களும்
கோணேசர் கல்வெட்டு என்ற வராலாற்று நூலும் எழுதப்பட்டுள்ளன.
மேலும்
முல்லைத்தீவை மையப்படுத்திய மக்கள் சார்பு இலக்கியமாக கதிரமலைப் பள்ளும்
மட்டக்களப்பை அடித்தளமாக கொண்டு கண்ணகி வழக்குரையும் படைக்கப்பட்டிருக்கின்றன.
எனவே அக்காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை போன்ற பிரதேசங்களில் உயர் நிலை இலக்கியங்களும், வைத்தியம், சோதிடம் போன்ற
அறிவிலக்கிய நூல்களும் உருவாகியிருந்ததோடு முல்லைத்தீவு மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் பொதுமக்கள் சார்பு இலக்கியங்கள் தோன்றியிருக்கின்றன. தமிழ் நாட்டில் சோழப் பெருமன்னர் காலத்தில் ‘உலா’ என்னும் சிற்றிலக்கியம் அக்காலத்தில் அரச சார்புநிலை பெற்று வளர்ச்சி அடைந்ததைப் போல யாழ்ப்பாண மன்னர் காலத்தில் ‘பரராசசேகரன் உலா’ அரச சார்பு நிலை பெற்ற இலக்கியமாக விளங்கியமையை காணலாம். அது மட்டும்ல தமிழ் நாட்டில் அக்காலங்களில் காவிய வளர்ச்சியில் தேக்க நிலை ஏற்பட்டிருந்த போது ஈழத்தின் முதற் காவியமான ‘இரகுவமிசம்’ தோன்றியிருந்தமையை தவிர்த்துவிட்டு ஈழத்து இலக்கியங்களை ஆய்வுக்குட்படுத்த முடியாது.

 

எனவே ஈழத்து இலக்கியங்கள் குறித்த தேடல் இன்னும் விசாலமாக்கப்படவேண்டுமே தவிர காலக்குறைப்புச் செய்து பதிவிடப்படுவது இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் அபத்தம் என எனக்குப் படுகிறது. ஈழத்து இலக்கியங்களுக்கு 700 வருட வரலாறு இருக்கின்றது என்பது எமக்கு ஏன் தெரியாது? என்பதற்கு மிக நீண்ட தர்க்க நியாயம் செய்ய வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.
ஈழம் என்பதை இந்தியாவின் ஒரு மாநிலமாக கருதும் ஒடுக்குமுறைச் சிந்தனைகளா?
ஈழம் என்பதற்கு தனித்துவமான ஒரு வரலாறு இருக்கின்றது என்பதை அடிக்கோடிடாமல் தவிர்ப்பதில் யாருக்கேனும் அரசியல் லாபம் ஏதும் இருக்கின்றதா?
ஈழத்தவர்களின் போர் இலக்கியங்களின் வரவுகளோடு உலக இலக்கிய அந்தஸ்தினை ஈழத்து இலக்கியங்களே பெறத் தொடங்கியமை குறித்து யாருக்கேனும் சங்கடங்கள் இருக்கின்றனவா?
என்பது வேறு ஒரு தளத்தில் இன்னும் விரிவாகப் பாக்கப்படவேண்டியதொன்று.
– சாம் பிரதீபன் –