வடக்கு வானில் வண்ண..வர்ண வெளிச்சங்கள்!
Kumarathasan Karthigesu
பிரான்ஸின் வட பகுதிகளில் நேற்று முன்னிரவு அடி வானில் வர்ண வெளிச்சங்கள் அவதானிக்கப்பட்டன. அயல் நாடுகள் பலவற்றிலும் கூட வடக்கு வான் பரப்புகளில் அது போன்ற அரிய வான் வெளி நிகழ்வு தோன்றியுள்ளது. ஊதா, பச்சை, சிவப்பு வண்ணங்களில் ஒளித் துகள்கள் தூவியது போன்று அடிவானம் காட்சி அளித்தது.
பிரான்ஸில் வழமைக்கு மாறாகக் கடும் குளிர் நிலவுகின்றது. அந்த நிலையில் இருண்ட குளிர்கால வானத்தில் இந்தக் கண்கவர் காட்சிகளைப் பலரும் அவதானித்துள்ளனர். அதனைப் படம் எடுத்துச் சமூக இணைய வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
வடக்கு வெளிச்சங்கள்(Northern lights) அல்லது அரோரா பொரியாலிஸ்(aurora borealis) என அழைக்கப்படுகின்ற இவ் வாறான வானம் ஒளிரும் அரிய நிகழ்வு சூரியனில் உருவாகின்ற புயல்கள் காரணமாகவே பூமியில் தோன்றுகின்றன.
கடந்த வெள்ளி, சனிக் கிழமைகளில் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்ற சூரியப் புயல்கள் (solar storms) காரணமாக சூரியனின் மேல்புற வளிமண்டலத்தில் தெறித்த மின் காந்தத் துகள்கள் பூமியை நோக்கிப் புயலினால் எடுத்துவரப்பட்டன என்றும் பூமியைப் பாதுகாக்கின்ற காந்தப் புலத்துடன் அவை மோதிய சமயத்திலேயே வான் பரப்பில் ஒளிரும் வண்ணங்கள் தோன்றின என்றும் விண்ணியல் நிபுணர்கள் விளக்கமளித்திருக்கின்றனர்.
பூமியைக் கவசமாகப் பாதுகாக்கின்ற காந்தப் புலத்துடன் சூரியனில் இருந்துவரும் மின் காந்தத் துகள்கள் மோதுகின்ற நிகழ்வே “அரோரா பொரியாலிஸ்” (aurora borealis) என அழைக்கப்படுகின்றது.
இங்கிலாந்து, ஜேர்மனி, டென்மார்க் நாடுகளிலும் ஞாயிறு – திங்கள் இரவுப் பொழுதில் இந்த அதிசய வான்வெளி நிகழ்வைப் பலரும் படம் பிடித்துப் பகிர்ந்துள்ளனர்.