கொழும்பு ஆர்ப்பாட்டம்: 28 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணை.

தேசிய மக்கள் சக்தியினால் கொழும்பில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட போராட்ட பேரணியின் மீது கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகம் நடத்தப்பட்டமையினால் 28 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்குள் சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு, பொலிஸ் மா அதிபருக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யூனியன் பிளேஸ் பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டு கொண்டிருந்த தருணத்தில், அந்த பகுதியில் போராட்டத்தை தடை விதிக்கும் வகையில் நீதிமன்றம் எந்தவித தடையையும் பிறப்பிக்காத பின்னணியில், பொலிஸார், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு தெரிவிக்கின்றது.