இத்தாலிக் கரையில் குழந்தைகள் உட்பட 60 பேரின் உடல்கள் ஒதுங்கின!

Kumarathasan Karthigesu

ஆப்கான்,பாகிஸ்தான்,ஈரான் குடியேறிகளுடன் வந்த படகு பாறையில் மோதி மூழ்கியது

ஒரு மாத சிசு, இரட்டையர்கள் உட்பட 20 சிறுவர்களும் பலி!!

இருநூறுக்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிவந்த மரப்படகு ஒன்று இத்தாலி நாட்டின் தெற்குக் கரைக்கு அப்பால் கடலில் கடும் புயல் காரணமாகப் பாறையுடன் மோதி விபத்துக்குள்ளாயிருக்கிறது.

கடலில் மூழ்கிய படகில் இருந்து தப்பிய சுமார் 60 பேர் நீந்தி இத்தாலியின் Crotone என்ற நகரின் கரையோரத்தை அடைந்துள்ளனர். அதேசமயம் உயிரிழந்த கைக் குழந்தை உட்பட குறைந்தது 59 உடல்கள் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றன. மேலும் பலர் காணாமற்போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான் நாடுகளில் இருந்து வெளியேறிய சுமார் இரு நூறு பேர் அந்தப் படகில் துருக்கியில் இருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. படகு இத்தாலியின் தெற்கு எல்லையில் கலாப்ரியா (Calabria) கரைக்கு அப்பால் கடலில் பாறை ஒன்றுடன் மோதித் தீப்பற்றி மூழ்கியதாக உயிர்பிழைத்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

உயிரிழந்த நிலையில் ஒதுங்கியோரில் பிறந்து ஒரு சில வாரங்களேயான சிசு மற்றும் இரட்டைக் குழந்தைகள் உட்பட இருபதுக்கும் அதிகமான சிறுவர்கள் அடங்கியுள்ளனர் என்று மீட்புப்பணியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இருபது அடி நீளமான அந்தப் படகில் இருநூறுக்கும் மேற்பட்டோர் ஏற்றப்பட்டிருந்தனர் என்றும் கடுமையான கடற் கொந்தளிப்பினால் படகு கற்பாறை ஒன்றில் மோதிய போது திடீரெனத் தீப்பற்றியதாகவும் உயிர் தப்பியவர்கள் இத்தாலி செய்தி ஊடகம் ஒன்றிடம் தெரிவித்திருக்கின்றனர்.

படகின் சிதறிய மரத் துண்டுகளும் அகதிகளது உடைமைகளும் இத்தாலியின் தெற்குக் கரைகளில் ஒதுங்கிக் காணப்படுகின்றன. கடலில் காணாமற்போனவர்களைத் தேடும் பணிகளில் பொலீஸ் ஹெலிக்கொப்ரர் கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வட ஆபிரிக்காவில் இருந்து மத்திய தரைக் கடலைத் தாண்டி ஐரோப்பாவை நோக்கிப் படையெடுத்து வருகின்ற வெளிநாட்டுக் குடியேறிகளின் முதலாவது முடிவிடமாக இத்தாலி விளங்கி வருகிறது. ஆபத்தான கடற் பயணங்கள் மூலம் தினமும் வந்து குவிகின்ற குடியேறிகளைக் கட்டுப்படுத்தவும், அவர்களைப் பங்கிட்டுப் பராமரிக்கவும் இத்தாலி ஐரோப்பிய நாடுகளது உதவியைக் கோரிவந்தது.

குடியேறிகள் முதலில் எந்த நாட்டை வந்தடைகிறார்களோ அந்த நாடே அவர்களைப் பாதுகாப்பாக மீட்டுப் பராமரிக்க வேண்டும் என்பதே ஐரோப்பியச் சட்டம் ஆகும். ஆனால் வகை தொகையின்றி ஆயிரக்கணக்கில் வந்து குவிகின்ற அகதிகளது சுமையை ஒரு நாடு மாத்திரம் தலையில் தாங்க முடியாது என்று இத்தாலி அதற்குக் கடும் எதிர்ப்பத் தெரிவித்து வந்தது. அகதிகளைக் கைவிடும் ஒரு நடவடிக்கையாக அவர்களது படகுகளை மத்திய தரைக் கடலில் பாதுகாத்து மீட்கும் மனிதாபிமானக் கப்பல் சேவைகளை இத்தாலிய அரசு அண்மையில் தடைசெய்திருந்தது.

இவ்வாறு ஐரோப்பா நோக்கி வரும் வட ஆபிரிக்க அகதிகள் விவகாரத்தில் ஓர் பொதுவான இணக்கப்பாடு சரிவர எட்டப்படாததால் மத்திய தரைக் கடலில் அகதிகளது உயிரிழப்புகள் தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">