ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த நபர் இன்று உயிரிழப்பு.

தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையால் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிமல் அமரசிறி என்ற நபர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

நேற்று  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல தொகுதி வேட்பாளராவார்.இது தொடர்பில் திங்கட்கிழமை ஜே.வி.பி. தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, மிகவும் அமைதியான முறையில் எம்மால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போதே பொலிஸாரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது காயமடைந்த 28 பேரில் பலர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றநிலையில், இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகக் காணப்பட்ட நிலையிலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல தொகுதி வேட்பாளரான நிமல் அமரசிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்கள் மீது இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டு, அவர்களது உயிருடன் விளையாடுவது பாரதூரமானதாகும்.இவ்வாறு இழக்கப்பட்ட உயிருக்கான பொறுப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.

மக்களின் உரிமையான தேர்தலைக் கோரியே நாம் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தோம். மாறாக பொலிஸாருடன் மோதுவதற்காக அல்ல.எமது உரிமைகள் மீறப்படும் போது நாம் அதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தினோம். இதன் காரணமாகவே எம்மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.எவ்வாறிருப்பினும் அரசாங்கத்தின் இதுபோன்ற தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கு இனினும் இடமளிக்க முடியாது. இதற்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.